Published : 25 Jun 2019 04:21 PM
Last Updated : 25 Jun 2019 04:21 PM

காட்பாடியில் 43 ஆண்டுகளாக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்து வந்த முதியவர்: போலீஸார் மீட்டு மறுவாழ்வு

காட்பாடி நெடுஞ்சாலையில் 43 ஆண்டுகளாக காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்து வந்த முதியவரை காட்பாடி போலீஸார் மீட்டு, அவருக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

காட்பாடியில் உள்ள நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் காந்தி வேடமிட்டு நெடுஞ்சாலைகளில் போகும் வாகனங்களை மறித்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அந்த முதியவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு அதை வலைதளங்களில் பதிவு செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர்.

சில நேரம் அவர் வாகனங்களில் அடிபட்டு விபத்தில் சிக்கவிருந்தார். இது காட்பாடி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புகழின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார் அவரைப் பற்றி விசாரித்தபோது பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகின.

ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட அவரது பெயர் சையத் பாஷா (87). இவருக்கு மனைவியும் 3 பெண் குழந்தைகளும் இருந்த நிலையில் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து காட்பாடி அடுத்துள்ள கிளிதான் பட்டறைக்கு வந்த அவர் வேலை எதுவும்செய்யாமல் இரண்டு கண் கொண்ட மேம்பாலத்தின் கீழ் தங்கி வந்தார்.

கடந்த 43 ஆண்டு காலமாக காட்பாடியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் காந்தியடிகள் வேடமிட்டு பிச்சை எடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன் பசியைப் போக்கிக் கொண்டார்.

இந்நிலையில் சையத் பாஷாவை மீட்ட காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோகரன் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் முதலில் அவருக்கு நல்ல உணவை அளித்தனர்.

பின்னர் போலீஸாரே அவரை குளிப்பாட்டி, நல்ல உடை வாங்கி அவருக்கு அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து காட்பாடி காவல் ஆய்வாளரிடம் பேசியபோது அவர் கூறியது:

“அந்த முதியவர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காந்தி வேடத்தில் பிச்சை எடுப்பதைப் பற்றி தகவல் தெரிந்தது. காட்பாடி வழியே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வெளிநாட்டினர் யாராவது அவரது படத்தை எடுத்து காந்தி வேடத்தில் பிச்சை எடுக்கிறார் எனப் பதிவிட்டால் நம்மைப் பற்றி காந்தியைப் பற்றி தவறான கருத்து பதிவாகும் என்பதால் உடனடியாக அவரை மீட்டோம்.

மேலும் அவர் வேகமாகச் செல்லும் வாகனங்களில் சிக்கி விட வாய்ப்பு உண்டு என்பதாலும் மீட்டோம். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் ஹைதராபாத்தில் யாரும் இல்லை எனத் தெரியவந்ததால் இங்கு அவரை ஒரு வீடு பிடித்து தங்க வைத்தோம்.

மாதம் ரூ.3000 வருமானத்திற்கு ஏற்பாடு செய்து தருகிறோம். இனி காந்தி வேடமிட்டு பிச்சை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளோம். அவரை மீட்டதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். நல்ல உள்ளங்கள் நிச்சயம் அவருக்கு உதவுவார்கள்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x