Published : 25 Jun 2019 01:26 PM
Last Updated : 25 Jun 2019 01:26 PM

அதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி

மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்தார். இதற்கு பாஜக எம்.பி. எதிர்ப்பு தெரிவிக்கவே அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

முன்னதாக,தயாநிதி மாறன் பேசும்போது, "புவிவெப்பமடைதல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிதி ஆயோக் அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

ஆனால் அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஊழலில் ஊறிய அரசு. பதவியில் உள்ள அமைச்சர்கள் பலரின் மீதும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆட்சியில்தான் தலைமைச் செயலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்தியிருக்கிறது.

2014-ல் இவர்கள் பண பலத்தால் வெற்றி பெற்றனர். ஆனால், அந்தப் புகார் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது.

திமுக தொடங்கிய அனைத்து திட்டங்களையும் கடந்த  8 ஆண்டுகளாக அதிமுக அரசு செயல்படுத்தாமல் முடக்கியுள்ளது. அதனாலேயே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

வாக்கு செலுத்தியவர்களுக்காக மட்டுமல்ல, வாக்கு செலுத்தாதவர்களுக்கும் சேர்த்தே அரசு நலத்திட்டங்களை வகுக்க வேண்டும். ஆகவே மத்திய அரசு தமிழ்நாட்டு தண்ணீர் பஞ்சத்தை போக்க ஆவண செய்ய வேண்டும். இது ஜனநாயக நாடு. இதில் அனைவரும் சமம். மற்ற மாநிலங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்களோ அதுபோல தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட பாஜக எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி,  "குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்பில்லாமல் பேசுகிறார். ஒரு மாநில அரசை வெளிப்படையாக ஊழல் அரசு என்று எப்படி நாடாளுமன்றத்தில் விமர்சிப்பார்?" என்று  கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பாஜக தோல்விக்குக் காரணம்..

தயாநிதி மாறன் பேசும்போது, "நீட் தேர்வு, இந்தி திணிப்பு போன்ற காரணங்களால்தான் பாஜகவை தமிழகம் புறக்கணித்தது.

வடமாநிலங்களில் பாஜக வெல்ல எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்ததால் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது.

தமிழகத்தின்மீது இந்தியை திணிக்கக் கூடாது. தமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள்? இந்தக் கல்வி முறையில் படித்துதான் மயில்சாமி அண்ணாதுரை விஞ்ஞானியாக இருக்கிறார். எனவே இந்தி, கல்வி முறை மாற்றம் என திணிப்புகளை பாஜக கைவிட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x