Published : 25 Jun 2019 11:14 AM
Last Updated : 25 Jun 2019 11:14 AM

கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு விரைவில் மீண்டும் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

டிஆர்பி சார்பில் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு விரைவில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. அதன்படி முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் தேர்வுக்கு மொத்தம் 30,833 பேர் விண்ணப்பித்தனர். அதில் 23,287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.

தொடர்ந்து அறிவித்தபடி மாநிலம் முழுவதும் கணினி வழித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம் உட்பட தேர்வு நடைபெற்ற பிற மையங்களிலும் இணையதள வேகம் குறைவாக இருந்தது. மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், திரு நெல்வேலி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இணையதள தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தேர்வைப் புறக்கணித்து பல்வேறு பகுதிகளில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வர்களை சமாதானம் செய்து, தேர்வை மதியத்துக்கு மாற்றி வைத்தனர். மேலும், சில மாவட்ட மையங்களில் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. முதல் முறையாக ஒரு போட்டித்தேர்வை டிஆர்பி கணினி வழியில் நடத்தியதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கு மாறாக அரசு சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் தேர்வர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு விரைவில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கணினி ஆசிரியர் தேர்வில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 118 பேரால் தேர்வு எழுத முடியவில்லை. அவர்கள் அனைவருக்கும் மிக விரைவில், தேர்வு நடத்தப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் தேர்வெழுதத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்'' என்றார் செங்கோட்டையன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x