Published : 25 Jun 2019 10:44 AM
Last Updated : 25 Jun 2019 10:44 AM

தங்கதமிழ்ச்செல்வன் திட்டமிட்டே பேசுவதுபோல் தெரிகிறது: புகழேந்தி கண்டனம்

தனது பேச்சு குறித்து வருத்தம் தெரிவிக்காமல், பிடிக்காவிட்டால் என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டியதுதானே என தங்கதமிழ்ச்செல்வன் பேசியிருப்பது திட்டமிட்டே பேசுவதுபோல் தெரிகிறது என அமமுகவின் புகழேந்தி கூறியிருக்கிறார்.

முன்னதாக, தங்கதமிழ்ச்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

அதில் "நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாரும் அழிந்துவிடுவீர்கள். இந்த மாதிரி அரசியல் செய்ய வேண்டாம் என்று உங்கள் அண்ணன் தினகரனிடம் போய் சொல். இந்த மாதிரி நடந்து கொண்டால் எப்போதும் நீங்கள் ஜெயிக்க மாட்டீர்கள்" என்று ஆவேசமாக பேசுவது இடம்பெற்றிருந்தது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தங்கதமிழ்ச்செல்வன், தனது அதிருப்தியை மீண்டும் வலிமையாக உறுதிப்படுத்துவது போலவே பேசியிருந்தார்.

"நான்  தவறு செய்திருந்தால், என்னைப் பிடிக்காவிட்டால் கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம். அதனைவிட்டு சின்னதனமாக செயல்படுகின்றனர். என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர்" என்று அவர் பேசியிருந்தார்.

இது குறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த புகழேந்தி, "தேனியிலிருந்து நேற்று இரவே (திங்கள் இரவே) பலரும் என்னை தொடர்பு கொண்டனர். தங்கதமிழ்ச்செல்வனை மன்னிக்குமாறு டிடிவி தினகரனிடம் கூறுங்கள் என்று வேண்டினர். அவர்கள் பெயரை எல்லாம் என்னால் குறிப்பிட முடியும்.

இப்போதுகூட தான் அசிங்கமாகப் பேசியதை தங்கதமிழ்ச்செல்வன் மறுக்கவில்லை. அதற்காக வருத்தப்படவில்லை. தெரியாமல் பேசிவிட்டேன், இரவு நேரத்தில் பேசிவிட்டேன் என்றெல்லாம் கூறியிருக்கலாம். எதுவுமே கூறாமல் என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டியதுதானே என்கிறார்.

என்னாலும் அவரைப் போல் பேச முடியும். ஆனால், என் கூடவே இருந்தவர், என்னுடன் பழகியவர் என்றே பார்க்கிறேன். அதிருப்தியை அவர் கட்சிக் கூட்டங்களில் பேசியிருக்க வேண்டும். நான்கூட கட்சிக் கூட்டங்களில் அதிருப்தி கருத்துகளை தெரிவித்திருக்கிறேன்.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அமமுக ஒரு தனி கட்சியாக தேர்தலில் 7% வாக்குகள் தனித்துப் பெற்றிருக்கிறது என்று நாங்கள் கூறிவரும் வேளையில் இவர் இவ்வாறு பேச வேண்டிய காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

தேனியில் ஓபிஎஸ்.ஸும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் தங்கதமிழ்ச்செல்வனை மதிப்பதில்லை. இப்படியான சூழலில் அதிமுகவில் இவரை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கட்சி பாதிக்கப்படுவதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவ்வளவு அசிங்கமாக பேசிவிட்டு என்னை நீக்க வேண்டியதுதானே என்று ஏன் கூறுகிறார். அவரே விலக வேண்டியதுதானே.

தங்கதமிழ்ச்செல்வன் தவறான முடிவெடுத்து ஒரு விளம்பரத்துகாக இப்படியெல்லாம் செய்கிறார். ஜெயக்குமார் வேண்டுமானால் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்லலாம். மேலிடம் என்ன சொல்லும் என்று அவருக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ட்விட்டரில் #AMMK #ThangaTamilSelvan #TTVDhinakaran போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x