Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் மாநாடு குடியரசு தலைவர், முதல்வருக்கு அழைப்பு

அமெரிக்காவின் சிகாகோவில் ஜூலை 7-ம் தேதி 10-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்திய குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்துலக தமிழ் ஆய்வு மன்ற ஆய்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.மருதநாயகம் கூறியதாவது: 10-வது உலகத் தமிழ் மாநாடு சிகாகோவில் ஜூலை 4 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, புதுவரலாற்றியல், அறிவியல் சார்ந்த ஒப்பீட்டு ஆய்வுகள் என்பது இந்த மாநாட்டின் மையப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகின் பல நாட்டு அறிஞர்களிடம் இருந்தும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வுச் சுருக்கங்கள் வந்துள்ளன. அதில் கீழடி அகழாய்வு உட்பட 200 ஆய்வுச் சுருக்கங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது பரிசீலனைகள் மூலம் 80 கட்டுரைகள் கருத்தரங்கில் வாசிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை எழுதியோருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பியுள்ளோம்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் செய்து வருகின்றன. மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க வேண்டும் என்று நிர்வாகக் குழு மற்றும் வரவேற்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முதல்வர் பங்கேற்கவில்லை

உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டில் தமிழக அரசின் பங்கேற்பு குறித்துதமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம் கேட்டபோது, “மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை.

குடியரசுத் தலைவரும் பங்கேற்கவில்லை என்றே அறிகிறேன்.

நிச்சயமாக நான் பங்கேற்பேன். அந்த மாநாடு சிறப்பாகநடைபெற தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். நிதி உதவிதொடங்கி இங்கிருந்து எத்தனை பேரை அனுப்பிவைப்பது என்பது வரை முதல்வர் ஆலோசித்து வருகிறார். விரைவில் அது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x