Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகள், பாலிதீன் ஷீட்களை பயன்படுத்தி கண்ணுக்கு தெரியாத தடுப்பணை.. கணிசமாக உயர்ந்த நிலத்தடி நீர்

கட்டிடங்களில் மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டுவதுபோல, கிராமங்கள் மற்றும் விவசாயத் தேவைக்கு நிலத்தடி நீரை செறிவூட்ட முறையை வெற்றிகரமாக செயல்படுத்திஉள்ளார் தமிழ்நாடு காதி, கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியும், திருவாரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியருமான சி.நடராஜன்.

2012-ம் ஆண்டில் இவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அங்கு தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க தீவிர முயற்சிமேற்கொண்டார். அதன்படி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள மூணாறுதலைப்பு என்ற இடத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பூமிக்கு அடியில் தடுப்பணை (Sub Surface Dyke) கட்டப்பட்டது.

மக்காத பாலிதீன் ஷீட்

ஆற்றின் இருகரைகளுக்கு இடையே 125 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம், 6 மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தின் அடியில் களிமண் பகுதியில் மக்காத பாலிதீன் ஷீட் (UV Treated HDPE Sheet) விரிக்கப்பட்டது. அதன்மீது மணல் நிரப்பப்பட்ட சாக்குகள் அடுக்கப்பட்டன. 1,755 டன்எடை கொண்ட 39 ஆயிரம் மணல் மூட்டைகளுடன் உருவாக்கப்பட்ட தடுப்பணை முழுவதும் பாலிதீன் ஷீட்களால் மூடப்பட்டது. பின்னர் அதன்மீது மணலைக் கொட்டி நிரப்பியதால் தடுப்பணை இருக்கும் இடமே தெரியவில்லை.

ஆழ்குழாய் கிணறுகள்

இதையடுத்து, தடுப்பணையில் இருந்து நீர் வரும் பகுதியில் ஆற்றின் நடுவே ஒவ்வொரு 100 மீட்டருக்கும், 20 மீட்டர் ஆழத் துக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன.

காவிரி ஆற்றில் தண்ணீர்திறக்கும்போதும், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் வெண்ணாறுக்குள் கட்டிய தடுப்பணைப் பகுதியில் தண்ணீர் தேங்கியது.

125 மீட்டர் அகலம், சுமார் 8 கி.மீ. நீளம், 6 மீட்டர் ஆழத்துக்கு பூமிக்குள் தண்ணீர் தேங்கியது. ஒவ்வொரு 100 மீட்டர் இடைவெளியில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வழியாக பூமிக்குள் சென்ற மழைநீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியது.

இதன்பயனாக, 2012-ம் ஆண்டில் 90 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், 2013-ம் ஆண்டில் 60 அடிக்கு உயர்ந்தது. அப்பகுதியில் 2 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீர் மேம்பட்டிருப்பது தடுப்பணையின் மிகப்பெரிய பலனாகும்.

எந்தவித கான்கிரீட் கட்டுமானமும் இல்லாமல், உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே குறைந்த செலவில் (அதிகபட்சம் ரூ.15 லட்சம்) இந்த தடுப்பணைகளை கட்ட முடியும். நிலம் கையகப்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரை செறிவூட்டும் திட்டம்இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி சி.நடராஜன் கூறியதாவது:

எனது தொழில்நுட்ப ஆலோசனையுடன், தற்போது சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகிறது. மதுரை வண்டியூர் கண்மாய்க்குள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

தமிழகத்தில் தாமிரபரணி, வைப்பாறு, குண்டாறு, வெள்ளாறு, பொன்னையாறு, பாலாறு ஆகிய ஆறுகளில் 10 அடி ஆழத்துக்கு மணற்பகுதி உள்ள இடங்களில் பூமிக்கு அடியில் தடுப்பணைகள் கட்டலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x