Published : 24 Jun 2019 04:44 PM
Last Updated : 24 Jun 2019 04:44 PM

சென்னை தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: சாட்டிலைட் படங்களுடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியீடு

தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னையிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸிலும் எதிரொலித்துள்ளது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

“தமிழ்நாட்டில் ஏற்கெனவே பலமுறை சில ஆண்டுகளுக்குமுன் பெய்த மழை வெள்ளப் பெருக்கின்போது, போதிய நீர் மேலாண்மைத் திட்டம் கைக்கொள்ளப்படாததால், பெய்த மழை வெள்ளமாகக் கடலுக்குச் சென்று வீணானது. இதை நீர்வளத் துறை மேலாண்மை நிபுணர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் அப்போதே சுட்டிக்காட்டியும் இருக்கின்றனர்.

வறட்சி - ஏரி, குளங்கள் எல்லாம் வற்றி விட்ட பிறகு, தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண சரியான அணுகுமுறை மேற்கொள்ள முயற்சிக்காதது ஏன்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளார்.

இந்நிலையில் 2019,  ஜூன் 21ம் தேதி நியூயார்க் டைம்ஸில் சோம்னி சென்குப்தா என்பவர் பெயரில் வெளியான செய்தியில்  “Chennai, an Indian City of Nearly 5 Million, Is Running Out of Water” என்று தலைப்பிட்டு சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சாட்டிலைட் படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் ஏறக்குறைய போய் விட்டது. இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் மழை நீர் தேக்கப்படும் ஏரிகள் சுத்தமாக வறண்டுள்ளன என்பதை சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன என்று கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி எடுக்கப்பட்ட புழல் ஏரிப் படத்தையும் க்டந்த ஞாயிறன்று எடுக்கப்பட்ட புழல் ஏரி சாட்டிலைட் படத்தையும் வெளியிட்டு தண்ணீர் தட்டுப்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளது அந்தச் செய்தி.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் இல்லை என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது. இது தவிர பொய்த்துப்போன மழை பற்றியும் அந்தச் செய்தி எடுத்துரைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x