Published : 21 Jun 2019 01:00 PM
Last Updated : 21 Jun 2019 01:00 PM

தண்ணீருக்காக திமுக போராடுவது வெளிவேஷ நாடகம்: செல்லூர் ராஜூ தாக்கு

தனது ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பிரச்சினைகளை சமாளிக்க எதுவும் செய்யாமல் தற்போது தண்ணீர் பற்றாக்குறைக்கு அதிமுகவை காரணம் காட்டி திமுக போராடுவது வெறும் வெளிவேஷ நாடகம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை காளவாசலில் உள்ள மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்தித்தார்.

மழை வேண்டி யாகம்..

அப்போது அவர், "முதல்வர், துணை முதல்வர் ஆணைக்கினங்க அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நாளை(ஜூன் 22) மீனாட்சியம்மன் கோவிலில் மழை வேண்டி யாக பூஜை நடத்தப்பட உள்ளது. 25 சிவாச்சாரியார்களை கொண்டு யாக பூஜை நடத்தப்பட உள்ளது" என்றார்.

திமுகவே காரணம்..

அமைச்சர் மேலும் பேசும்போது, தற்பொழுது சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு  முழு காரணமே திமுக ஆட்சிதான் என்றார்.

திமுக ஆட்சியில்தான் நீர்நிலைகளில் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டன. மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க என்ன திட்டத்தை கொண்டு வந்தார் என்று சொல்ல முடியுமா?

ஆட்சிக் காலத்தில் குடிநீர் மேம்பாட்டுக்காக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் அதிமுக ஆட்சியை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இது  திமுக வெளிவேஷ நாடகம் நடத்துவதை காட்டுகிறது என்று கூறினார்.

ஐந்து மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு வாய்ப்பில்லை

மதுரை மாவட்டம் முழுவதும் ரூபாய் 22.8 கோடி செலவில் கண்மாய்கள் தூர் வாரப்பட்டு குடிமாரமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளதன் விளைவாக குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் செய்ததன் விளைவாக நீர் மட்டம் உயர்த்தப்படடுள்ளதால் மதுரை, திண்டுக்கல்  உள்ளிட்ட  5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனைக்கு வாய்ப்பே இல்லை.

அதேபோல். திமுக ஆட்சியின் போது மதுரை மாநகர், புறநகர் மக்களுக்கும் எந்த வித நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

ஒற்றைத் தலைமைதான்..

அதிமுகவில் இன்று உள்ள தலைமையே தொடரும், அதிமுக இயக்கம் வலுவாக உள்ளது. அதிமுகவில் சிக்கலை உருவாக்கலாம் என்ற நோக்கில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று செல்லூர் ராஜூ கூறினார்.

நம்பிக்கை இருக்கிறது..

கேரள அரசு அளிப்பதாகக் கூறிய 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ஏன் முதல்வர் ஏற்க மறுத்தார் என்று செய்தியாளர்கள் வினவ? "கேரளா வழங்குவதாக அறிவித்த தண்ணீரை  வேண்டாம் என முதல்வர் மறுத்திருக்க மாட்டார், எப்படிப் பெறுவது என்பது குறித்து ஆய்வு செய்து பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x