Published : 21 Jun 2019 09:46 AM
Last Updated : 21 Jun 2019 09:46 AM

தமிழகத்துக்கு கேரளா தண்ணீர் வழங்க முன்வந்த விவகாரம்: அமைச்சர் வேலுமணி விளக்கம்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து அண்டை மாநிலமான கேரளா சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்ப முன்வந்ததாகவும் தமிழக அரசு இப்போது தேவையில்லை எனக் கூறியதாகவும் கேரள முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் அளித்துள்ள விளக்கம்:

''கேரள முதல்வரின் செயலாளர் தமிழக முதல்வரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.

முதல்வர் பழனிசாமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருப்பதால் முதல்வரின் செயலாளர் என்னிடமும், குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்தார்.

சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD. தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக இன்று நடைபெறவுள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி உரிய முடிவினை அறிவிப்பார்.

இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை தமிழக முதல்வர் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x