Published : 18 Jun 2019 09:01 PM
Last Updated : 18 Jun 2019 09:01 PM

கடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமானப் பிரச்சினையில் பணத்தைத் திருப்பி தந்த பின்னர் தரவில்லை என மோசடி செய்து தாக்கிய பிரமுகருக்கு ஆதரவாக இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸார் என்னை மிரட்டுகிறார்கள் என டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பிரபலமான வழக்குகளில் ஒன்று ஜீவஜோதி வழக்கு. ஜீவஜோதியின் முதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

தற்போது ஜாமீனில் இருக்கும் ராஜகோபால் ஜூலை 7-ம் தேதி சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் பின்னர் ஜீவஜோதி வேறு திருமணம் செய்து அவருக்கு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் ஜீவஜோதி இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் ஒன்றை அளித்தார். தனது கணவரின் வியாபாரத்திற்காக வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தபின் அதை மறைத்து தங்களைத் தாக்கிய பிரமுகருக்கு ஆதரவாக இரண்டு இன்ஸ்பெக்டர்களும் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில்,  “எனது கணவர் தண்டபாணியின் தாயாருக்குச் சொந்தமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒரு வீடு உள்ளது. கணவரின் பணத்தேவைக்காக அந்த வீட்டைக் கடந்த 19.07.2018 அன்று வேதாரண்யத்தைச் சேர்ந்த வேதராசு என்பவரிடம் அடமானமாக வைத்து ரூ.10 லட்சம் வாங்கினோம்.

இதற்காக  பூர்த்தி செய்யப்படாத  இரண்டு செக், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொடுத்தோம்.  கடந்த ஜனவரி 8-ம் தேதி நானும், எனது கணவரும் வேதராசுவின் வீட்டுக்குச் சென்று கடன் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அடமானமாக வைக்கப்பட்ட பத்திரத்தைக் கேட்டோம்.

ஆனால், அவர் பத்திரத்தை தேடிப்பார்த்து விட்டு, அது கிடைக்கவில்லை, மறுநாள் தருவதாக கூறினார். மறுநாள் சென்றபோது எங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி கணவரை நாற்காலி மற்றும் கத்தியால் தாக்கினார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மாறாக வேதராசு கொடுத்த புகாரின் பேரில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வேதாரண்யம் போலீஸார் எனது வீட்டுக்கும், உறவினர்கள் வீட்டுக்கும் அடிக்கடி வந்து மிரட்டல் விடுக்கின்றனர். இரண்டு காவல் ஆய்வாளர்கள் போலீஸாருடன் எனது வீட்டுக்கு வந்து தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி மிரட்டினர். தாக்கி, பண மோசடியில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர், கேட்டால் ஐஜி உத்தரவு என்றும் கூறுகின்றனர்.

பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கான ஆதாரம், போலீஸார் மற்றும் வேதராசுவின் ஆட்கள் போலீஸாருடன் எனது வீட்டுக்கு இரவில் வந்து எங்களை மிரட்டியதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

எனவே, எங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேதராசுவிடம் இருந்து பத்திரத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x