Published : 18 Jun 2019 08:13 PM
Last Updated : 18 Jun 2019 08:13 PM

5 மாதத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி

பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்படும் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டிடப் பணி முழுவதும் இன்னும் ஐந்து மாத காலத்திற்குள் நிறைவடைந்து மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை, மெரினா கடற்கரையில், ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

''ஜெயலலிதா நினைவு மண்டப கட்டிடப் பணியை பார்வையிட நாங்கள் வந்திருக்கின்றோம். இந்தப் பணி கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி அன்று தொடங்கப்பட்டு, இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் பணியை வேகமாக, துரிதமாக முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் புகழுக்குப் புகழ் சேர்க்கின்ற விதமாக இந்த நினைவு மண்டபம் அமைய இருக்கின்றது. இந்த நினைவு மண்டபம் ரூபாய் 50.80 கோடி செலவில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது ஒரு டெக்னிக்கலான கட்டிடப் பணி. இது பல வேலைப்பாடுகளுடன் நடைபெறுகின்ற பணி. கிட்டத்தட்ட 60 சதவிகிதப் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்தப் பணி சிறப்பாக நடைபெற்று மக்கள் போற்றும் விதமாக, பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்படும் இந்த நினைவு மண்டப கட்டிடப் பணி முழுவதும் இன்னும் ஐந்து மாத காலத்திற்குள் நிறைவடைந்து மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 9 பேர் இந்த நினைவிடத்திற்கு வரவில்லையே?

இது தவறான செய்தி. ஏற்கெனவே ஜெயலலிதா நினைவிடத்திலே அவரவர்கள் வந்து நினைவஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதிமுக எம்.பி.க்கள் தமிழுக்குத் துரோகம் இழைக்கிறார்கள் என்று?

அது அவர்களுடைய பாணி. நாங்கள் உண்மையைப் பேசுகிறோம். ஆனால், திமுகவில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி படித்திருக்கிறார்கள். யார் படித்திருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தயாநிதி மாறன் இந்தி படித்திருக்கிறார், ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்கிறார்கள். நாங்கள் அப்படி பொய் சொல்லவில்லை.

அதிமுகவும், நிர்வாகிகளும், தொண்டர்களும் உணர்வுப்பூர்வமாக, மனப்பூர்வமாக தமிழை மதிக்கக்கூடியவர்கள். ஆகவே, எங்கள் உள்ளத்திலே தமிழ் இருக்கின்றது. உங்களைப் போல் இருக்கின்ற நிருபர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என்ன உணர்வு இருக்கின்றதோ, அதே உணர்வு எங்களுக்கும் இருக்கின்றது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x