Published : 18 Jun 2019 07:47 PM
Last Updated : 18 Jun 2019 07:47 PM

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெயில் அதிகமாக இருந்ததையும் தண்ணீர் தட்டுப்பாட்டையும் காரணமாகக் கூறி கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பை மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்க கோரிக்கை எழுந்தது. ஆனால் அறிவித்தபடி கடந்த ஜூன் 3-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிழக்கு தாம்பரத்தில் அரசு நிதிஉதவி பெறும் கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கழிப்பறை மூடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதில் உண்மையில்லை. பள்ளி நேரம் முடிந்த பிறகு வழக்கம்போல் கழிப்பறை மூடப்பட்டது. காலை 8 மணிக்கு வழக்கம் போல் கழிப்பறை திறக்கப்படும்.

அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் டேங்கர் லாரிகள் மூலம் வரவழைத்து மாணவர்களுக்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கலாம்.  அதை தனியார் பள்ளிகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் இதுவரை மூடப்படவில்லை'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x