Published : 18 Jun 2019 06:27 PM
Last Updated : 18 Jun 2019 06:27 PM

2-வது திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்ததாக 4 வயதுக் குழந்தை கொலை: தாய், இரண்டாவது கணவர் கைது

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் இரண்டாது திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்த 4 வயதுக் குழந்தையை தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் பாலாற்றில் புதைக்கப்பட்ட சடலத்தை காவல் துறையினர் தோண்டி எடுக்க, தடயவியல் நிபுணர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டம் வாலாஜா பாக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காவியா (25) என்பவர் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறிய காவியா, ராமச்சந்திரனைத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தருண் (4) என்ற மகன் இருந்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாக்குப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் காவியா தனது மகனுடன் வசித்து வந்தார்.

ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்த காவியா, தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்லும்போது ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தியாகராஜன் (26) என்பவருடன் பழகியுள்ளார். நாளடைவில் கூடா நட்பு ஏற்பட்டதால் அடிக்கடி தியாகராஜன் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது தியாகராஜனின் தாயார் ராணி, இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். முதல் கணவருடன் விவாகரத்து பெறாத நிலையில் தாய் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியேறிய காவியா, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ராணிப்பேட்டை-சித்தூர் சாலையில் உள்ள திருச்சுழி முத்துமாரியம்மன் கோயிலில் தியாகராஜனைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், வாலாஜா பெல்லியப்பா நகரில் வாடகை வீட்டில் மூன்று பேரும் வசித்து வந்தனர்.

இதற்கிடையில், தருணை தனது மகனாக வளர்க்க முடியாது என்று கூறி காவியாவிடம் தியாகராஜன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு காவியாவும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார். அவ்வப்போது குழந்தை தருணை தியாகராஜன் சித்ரவதை செய்துள்ளார். ஒருமுறை வீட்டுக்கு வந்த காவியாவின் சகோதரி அஜந்தா என்பவர் தருணின் நிலையைப் பார்த்து  இருவரையும் கண்டித்துள்ளார். பின்னர். குழந்தையை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு அஜந்தா புகாரளித்தார்.

காவல் துறையினர் விசாரணையின்போது தாயுடன் இருப்பதாக குழந்தை தருண் கூறியுள்ளார். இதையடுத்து காவியாவுடன் குழந்தையை அனுப்பி வைத்தனர். ஆனால், குழந்தையை வளர்க்க தியாகராஜன் விரும்பவில்லை. கடந்த 13-ம் தேதி குளிக்க வைப்பதாகக் கூறி தருணை தியாகராஜன் அழைத்துச் சென்றார். அங்கு, தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் குழந்தையை மூழ்கடித்துக் கொலை செய்தார். இதற்கு காவியாவும் உடந்தையாக இருந்துள்ளார். நாள் முழுவதும் வீட்டிலே சடலத்தை வைத்திருந்தனர். மறுநாள் (14-ம் தேதி) தேர்வு எழுதுவதற்காக காவியா கல்லூரிக்குச் சென்றுவிட்டார். மாலை வீடு திரும்பியபோது குழந்தையின் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து சடலத்தைப் புதைத்துவிட முடிவு செய்தனர்.

கடந்த 14-ம் தேதி இரவு பெரிய பையில் குழந்தையின் சடலத்தை வைத்து இருசக்கர வாகனத்தில் ஆற்காடு-செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றங்கரைக்குச் சென்றனர். ஆற்காடு டெல்லிகேட் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள பாலாற்றில் சடலத்தைப் புதைத்தனர். காவியாவை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு தியாகராஜன் மட்டும் சென்னை செல்வதாக கூறிச் சென்றார். குழந்தை தருண், தனது வாடகை வீட்டின் உரிமையாளருடன் திருப்பதிக்கு சென்றிருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதற்கிடையில், குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட ரகசியத் தகவல் வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் பாலுவுக்குக் கிடைத்தது. அதன்பேரில் காவியாவை நேற்று முன்தினம் பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது, குழந்தையைக் கொலை செய்து பாலாற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த தியாகராஜனைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் தியாகராஜன் செல்வதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். திருவண்ணாமலை தாலுகா காவலர்கள் உதவியுடன் நேற்று அதிகாலை தியாகராஜனைப் பிடித்தனர். பாலாற்றில் குழந்தை தருணின் சடலம் ஆற்காடு வட்டாட்சியர் வத்தசலா முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலையில் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். 

குழந்தையைக் கொலை செய்து சடலத்தைப் புதைத்ததாக காவியா, தியாகராஜன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தியாகராஜன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாகவும் தனியாக விசாரணை செய்யப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x