Published : 18 Jun 2019 03:12 PM
Last Updated : 18 Jun 2019 03:12 PM

ஆந்திராவைப் போல தமிழகத்திலும் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துக: ராமதாஸ்

ஆந்திராவைப் போல தமிழகத்திலும் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆந்திராவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு, இப்போதுள்ள மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது. அளவில் சிறிய, நிர்வாகத்தில் சிறந்த மாவட்டங்கள்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்தவை என்ற கொள்கையின்படி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதை பாமக முழு மனதுடன் வரவேற்கிறது.

சிறியவையே அழகு (Small is Beautiful) என்ற கொள்கையில் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால்தான் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பிரித்து நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாமக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய மாவட்டங்கள் எதுவும் உருவாக்கப்படாத நிலையில், பாமகவின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வேலூர் உள்ளிட்ட பெரிய மாவட்டங்களையும் இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று ஆந்திராவில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு, அம்மாநிலத்தில் இப்போதுள்ள 13 மாவட்டங்களை மறுவரையறை செய்து 26 மாவட்டங்களை உருவாக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திரத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே. ஆனால், மக்களவைத் தொகுதிகளை விட கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்படவுள்ளது. ஆந்திரத்தின் மொத்த மக்கள்தொகை 4.93 கோடி ஆகும். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகை 19 லட்சமாக இருக்கும்.

ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலம் மாவட்டங்களை மறுவரையறை செய்வதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு அந்த மாநிலம் உருவாக்கப்பட்டபோது 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவற்றைப் பிரித்து மொத்தம் 31 மாவட்டங்களை சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு உருவாக்கியிருக்கிறது. அம்மாநிலத்தில் ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகை 11.29 லட்சம் பேர் மட்டும் தான். தமிழகத்தின் பல மாவட்டங்களில் 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தெலுங்கானாவில் 2 மாவட்டங்களில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி தான் இருக்கும் என்பதிலிருந்தே அந்த மாவட்டங்கள் எவ்வளவு சிறியவை என்பதை உணர முடியும்.

தெலங்கானா மாநிலம் ஆந்திராவுடன் இணைந்து இருந்த போது எட்டிய வளர்ச்சியைக் காட்டிலும் இப்போது அதிவேக வளர்ச்சியை எட்டி வருகிறது. இதற்கு ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது முதல் காரணம் என்றால், தெலங்கானாவின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது இரண்டாவது முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்போது ஆந்திராவிலும் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் மூலம் அம்மாநிலமும் அதிவிரைவான வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

தமிழகத்திலும் பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதன் மூலம், அந்த மாவட்டங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதை உறுதி செய்ய முடியும். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் சராசரியாக 22 லட்சம் பேர் உள்ளனர். வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு  செல்ல 200 கி.மீ . தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக வடக்கு மாவட்டங்கள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகவும் பெரியவையாக உள்ளன. இவற்றை நிர்வகிப்பதும், இந்த மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் மிகவும் கடினமானதாகும். இது வளர்ச்சிக்கு உதவாது.

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் சில மாவட்டங்களை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. அதனால்தான் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும்; அவற்றின் மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். அவ்வகையில் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியது சரியான திசையில் எடுக்கப்பட்ட மிகச்சரியான நடவடிக்கை ஆகும். அதன்பின்னர் வேலூர் மாவட்டத்தை பிரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான போதிலும், புதிய மாவட்டங்கள் குறித்து தமிழக அரசிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.

சிறிய மாவட்டங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே, புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழகத்தின் மாவட்டங்களை 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுவரையறை செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும். இதற்குத் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x