Published : 17 Jun 2019 07:50 PM
Last Updated : 17 Jun 2019 07:50 PM

வரும் 22-ம் தேதியன்று வேலூர், கிருஷ்ணகிரியில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

ஜூன் 22 -ம் தேதி அன்று வேலூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நேர்காணலுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்வோர், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏதுவாகவும், ஜூன் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று, வேலூர்,  மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில், சிறப்பு பாஸ்போர்ட் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமினை சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடத்துகிறது.

வரும் 22-ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் முகாமிற்கான சந்திப்பு நேர ஒதுக்கீடு நாளை மறுநாள் 19.06.2019 அன்று புதன்கிழமை  பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்.

வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகங்களில் இயங்கும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள்,  (22.06.2019) சனிக்கிழமை அன்று மற்ற பணி நாட்களைப் போல செயல்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முகாமின் மூலம் சுமார் 130 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரர்களும் www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.  ஏ.ஆர்.என். (விண்ணப்பப் பதிவு எண்-ARN) உருவாக்கி, இணையதளத்தின் வழியே உரிய கட்டணத்தைச் செலுத்தி, பின்னர் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முகாமில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள், பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை, அச்சிட்ட வடிவத்தில் அந்தந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேவையான அசல் ஆவணங்களையும் சுயசான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். புதிய மற்றும்  மறுவெளியீட்டுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். நேர்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும்  நிராகரிக்கப்பட்டுள்ள டோக்கன்கள் இந்த முகாமின்போது பரிசீலிக்கப்படமாட்டாது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x