Published : 17 Jun 2019 07:34 PM
Last Updated : 17 Jun 2019 07:34 PM

குடிநீர் தேவைக்காக தமிழகம் முழுவதும் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறுகள்: அமைச்சர் வேலுமணி தகவல்

கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக தமிழகம் முழுவதும் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும், குடிநீர் குறித்த செயற்கையான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்தும் மாநில அளவிலான அலுவலர்களுடன் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், அவற்றின் அளவு மற்றும் நீர் இருப்பு குறித்தும் தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில், 2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக மிக குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. பருவமழை பொய்த்த காரணத்தால் கோடைகாலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் பொருட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பேசியதாவது:

“தமிழகத்தில் உள்ள சென்னை நீங்கலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கோடைகால குடிநீர்த் தேவையைச் சமாளிக்க மொத்தம் சுமார் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளைக் கிணறுகளை புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில், மட்டும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக அரசால் ரூ.15,838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம் - 2638.42 கோடியில் 4,098 பணிகளும்,  தமிழ்நாடு குடிநீர் வாரியம்- 5,346 கோடியில் 268 குடிநீர் பணிகளும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் – 4,409 கோடியில் 6,834 குடிநீர்ப் பணிகளும், பேரூராட்சி பகுதிகளில் - 196 கோடியில், 4,417 பணிகளும் மற்றும் ஊரகப் பகுதிகளில் - 1,929 கோடியில் 1.08 லட்சம் குடிநீர்ப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்ரூத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் - 18 பெரிய குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.6496 கோடியில் நடைபெற்று வருகின்றன. இன்றைய தேதியில், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்ததால், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மொத்த குடிநீரின் அளவு தற்போதைய நிலையில் 7,300 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கும், குடிநீர் விநியோகப் பணிகளைக் கண்காணிக்க செயலி ஒன்றும், மாநகராட்சிகளைப் பொறுத்தவரை மண்டல வாரியாக செயலி ஒன்றும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை மாவட்ட அளவில் செயலி ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

ஊராட்சிகளைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் புகாருக்கென தனி செயலியும், கட்டணமில்லா தொலைபேசியும் உருவாக்கப்படும். இச்செயலிகள் வழியாக குடிநீர் பற்றிய புகார்கள் மட்டும் பெறப்பட்டு, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து புகார்தாரருக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.

மேலும், கட்டணமில்லா தொலைபேசி மற்றும் மற்றும் தனி செயலியில் (Special APP) பெறப்படும் குடிநீர் பற்றிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தைப் பொறுத்தவரை மேலாண்மை இயக்குநராலும், பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஆணையராலும், நகராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராலும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை பேரூராட்சிகளின் இயக்குநராலும், உதவி இயக்குநராலும், ஊரக வளாச்சித் துறையைப் பொறுத்தவரை ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராலும், திட்ட அலுவலர்களாலும் அன்றாடம் இச்செயலியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

குடிநீர் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் விநியோகக் குழாய்களில் அடைப்புகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிநீர் பயனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள், மண்டல இயக்குநர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் குடிநீர் பிரச்சனை தீர்க்க வார்டுக்கு ஒரு பொறுப்பான அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் அன்றாடம் தேவையான அறிவுரைகள் வழங்கி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வழிவகுப்பார்கள்''.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x