Published : 17 Jun 2019 05:12 PM
Last Updated : 17 Jun 2019 05:12 PM

குடிநீர் சிக்கனம் குறித்து திரையரங்குகளில் விளம்பரம் மூலம் விழிப்புணர்வு: அமைச்சர் வேலுமணி

குடிநீர் சிக்கனம் குறித்து திரையரங்குகளில் விளம்பரம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

குடிநீர்த் திட்டம் மற்றும் விநியோகம் தொடர்பிலான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் சென்னை, ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''எந்த ஓட்டலும் மூடிவிடுவோம் என்று சொல்லவில்லை. இது பொய்யான தகவல். உணவகங்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் கட்டமைப்புகளுக்குத் தகுந்தவாறு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வீண் வதந்திகளைப் பரப்பக்கூடாது.

தமிழகத்தில் உள்ள சென்னை நீங்கலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கோடைக்கால குடிநீர்த் தேவையைச் சமாளிக்க மொத்தம் சுமார் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளைக் கிணறுகளை புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில், மட்டும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.15,838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை குடிநீர் வாரியம் - 2638.42 கோடியில் 4,098 பணிகளும், தமிழ்நாடு குடிநீர் வாரியம்- 5,346 கோடியில் 268 குடிநீர் பணிகளும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் – 4,409 கோடியில் 6,834 குடிநீர்ப் பணிகளும், பேரூராட்சி பகுதிகளில் - 196 கோடியில், 4,417 பணிகளும் மற்றும் ஊரகப் பகுதிகளில் - 1,929 கோடியில் 1.08 இலட்சம் குடிநீர்ப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக திரையரங்குகளில் விளம்பரம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். குடிநீர் பிரச்சினை குறித்து கண்காணிக்க பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரிகள் குழு அமைக்கப்படும். இதுதொடர்பான புகார்களை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்துள்ளோம்'' என்றார் வேலுமணி.

முன்னதாக சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, உச்சகட்டத்தை அடைந்ததால், ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதாகவும் தண்ணீர் கிடைக்காததால் ஓட்டல்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x