Published : 17 Jun 2019 04:57 PM
Last Updated : 17 Jun 2019 04:57 PM

சென்னையில் நவம்பர் 2019 வரை தினமும் தடையில்லா குடிநீர்: அமைச்சர் வேலுமணி பேட்டி

சென்னையில் மழையே இல்லாவிட்டாலும், நவம்பர் மாதம் வரை தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், கோடை காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் அலுவலர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“சென்னை மாநகரில் இன்றைய தேதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் நீர் இருப்பு 26 மில்லியன் கன அடி அளவே உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தினசரி 543 மில்லியன் கன அடி நீர் பெறப்பட்டு மாநகர குடிநீர் விநியோகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இதே நாளில் 2,542 மில்லியன் கன அடியாக இருந்தது.

சென்னை மாநகருக்கு தினமும் ஜூலை 1-ம் தேதி முதல் நவம்பர் 2019 மாதம் வரை மழைப்பொழிவு இல்லாவிடினும், நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 மில்லியன் குடிநீரும், வீராணம் ஏரியிலிருந்து 90 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி சுரங்கத்திலிருந்து 60 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி பகுதியில் ஏற்கெனவே உள்ள 22 ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து 20 மில்லியன் லிட்டர்  குடிநீரும் பெறப்படுகிறது.

இதே பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 9 ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து 10 மில்லியன் லிட்டர் குடிநீரும், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 110 மில்லியன் லிட்டர் குடிநீரும், மாகரல் & கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியம் அமைக்கப்பட்ட 13 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 15 மில்லியன் லிட்டர் குடிநீரும் பெறப்படும்.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீரும், ரெட்டை ஏரி மற்றும் எருமையூர் கல்குவாரி ஆகியவற்றிலிருந்து 2 மாத காலத்திற்கும், அதன் பின்னர் 9/2019 முதல் 11/2019 வரை அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரிகளிலிருந்து தலா 10 மில்லியன் லிட்டர் வீதம் மொத்தம் 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், ஆக மொத்தம் நவம்பர் 2019 மாதம் முடிய 525 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் கட்டமைப்புகளுக்குத் தகுந்தவாறு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, வீண் வதந்திகளைப் பரப்பக் கூடாது.

சென்னை மாநகரில், குடிநீர் விநியோகப் பணிகளைக் கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் 1 கண்காணிப்பு பொறியாளர், 1 செயற்பொறியாளர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். மேலும், 3 மண்டலங்களுக்கு ஒரு தலைமை பொறியாளர் வீதம் இக்குழுக்களின் பணிகளை தினமும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும், இரு மண்டலங்களுக்கு ஒருவர் வீதம் 15 மண்டலங்களிலும், காலை 6 மணி முதல் குடிநீர் விநியோகப் பணிகளைப் பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.

சென்னை மாநகரில் 200 வார்டுகளிலுள்ள பணிமனைப் பொறியாளர்களின் குடிநீர் விநியோகப் பணிகளை கண்காணிக்க கைசால் ஆப் (Kaizal App) என்ற செயலி மூலம் அவர்கள் ஆய்வு செய்யும் இடம், நேரம் போன்றவை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

சென்னை குடிநீர் வாரியத்தில், குடிநீர் மற்றும் அனைத்து விதமான புகார்களைத் தெரிவிக்க சென்னை குடிநீர் வாரியத் தலைமை அலுவலகத்தில் வாரத்தின் 7 நாட்களும் 24 / 7 மணி நேரமும் 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் பகுதிப் பொறியாளர்கள் வாரியாக கட்டணமில்லா தொலைபேசி ஒன்று ((Toll Free Number) நிறுவப்பட்டு குடிநீர் பற்றிய புகார்கள் மட்டும் சிறப்பினமாக பெறப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கும், குடிநீர் விநியோகப் பணிகளைக் கண்காணிக்க செயலி ஒன்றும், மாநகராட்சிகளைப் பொறுத்தவரை மண்டல வாரியாக செயலி ஒன்றும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை மாவட்ட அளவில் செயலி ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிநீர் பயனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பூங்கா, செடிகொடிகள், மரங்கள் போன்றவற்றிற்கு குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது. பொதுக் குழாய்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குளியல் தொட்டிகள் ((Bath Tub) மற்றும் ஷவரில் (Shower) குளித்து தண்ணீர் வீணாகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குடிசைப் பகுதிகளிலும், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்களையும், செயலியின் செயல்பாட்டு விவரங்களையும், பொதுமக்கள் எவ்வாறு அணுகுவது என்பது பற்றி விரிவாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் செய்தியாக வெளியிடப்பட வேண்டும்.

கட்டணமில்லா தொலைபேசி செயல்பாடு மற்றும் செயலி செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒவ்வொரு உள்ளாட்சியிலும் இரு பொறுப்பான அலுவலர்களை பொறுப்பாக்க வேண்டும்''.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x