Last Updated : 17 Jun, 2019 12:51 PM

 

Published : 17 Jun 2019 12:51 PM
Last Updated : 17 Jun 2019 12:51 PM

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு திமுகதான் காரணம்: எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு திமுக ஆட்சியில் இருந்தது தான் காரணம் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா கூறியதாவது:

''புதிய கல்விக் கொள்கை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. 400 பக்க அறிக்கையில், 3 ஆவது மொழியைக் கற்பிக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இந்தி மொழி உள்ள பிஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்  தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளைக் கற்பிக்கலாம். அதேபோன்று, இங்கு இந்தியை விருப்பப் பாடமாக கற்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை, இந்தி திணிப்பு என்று மத்திய அரசுக்கு எதிராக திமுக திருப்பப் பார்க்கிறது. ஆனால், திமுகவின் முக்கியத் தலைவர்களின் உறவினர்கள் நடத்தும் 45 பள்ளிகளில் மட்டும் இந்தி, சமஸ்கிருதம் கற்பிக்கலாமா ? அப்பள்ளிகளில்தமிழ் ஒரு பாடமாகக் கூட  நடத்தப்படுவதில்லை. அந்தப் பள்ளிகளுக்கு முன் வைகோ, வைரமுத்து போன்றோர் போராட்டம் நடத்த வேண்டியதது தானே...? திமுகவினருக்கு வியாபாரத்துக்கு மட்டும் இந்தி வேண்டும். அரசியலுக்கு இந்தி வேண்டாம் என்பது சரியா.

தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சியினர் டீ கடை, பிரியாணி கடை என்று தாக்குதல் நடத்தினர்கள். இதற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினே மன்னிப்பு கோரினார். தற்போது, நாகர்கோயிலில் திமுக கட்சியைச் சேர்ந்த கடைக்காரரிடம் மாவு குறித்து கேட்டபோது, எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்கியுள்ளார். ஆகவே, திமுக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

தமிழகம் தீவிரவாதிகளின் மையமாக மாறிவருகிறது. கோவையில் 7 பேர் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில்தான் இலங்கை குண்டுவெடிப்புக்கு கரு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவும் திட்டமிட்டிருந்தனராம். இதனைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் மீது அளிக்கப்படும் புகார்களை வழக்குப் பதிவு செய்ய போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். இதுபோன்று கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் இஸ்லாமியர் மீது புகார் அளித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அந்த மாணவியை அவரது காதலன் மிரட்டியதால், தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு திமுக ஆட்சியில் இருந்தது தான் காரணம். சென்னையில் வள்ளுவர் கோட்டம், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை, நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான கட்டிடங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்படதால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் பிரச்சினையை அடுத்த தமிழக அமைச்சர் வேலுமணி, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு அதற்கு உதவி செய்யும்.  இயக்குநர் பா.ரஞ்சித் கிறிஸ்தவர் என்பதால், ராஜராஜன் குறித்து அப்படிப் பேசியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. இதனை, சொல்லிக்கொண்டே இருக்க தேவையில்லை''.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x