Published : 15 Jun 2019 09:34 PM
Last Updated : 15 Jun 2019 09:34 PM

போலீஸ் என்கவுன்டர்: மாஜிஸ்ட்ரேட் நேரில் விசாரணை- வல்லரசுவின் தாயார் கதறல்

போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வல்லரசுவின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மாஜிஸ்ட்ரேட் நேரில் சென்று விசாரணை நடத்தினார். வல்லரசுவின் தாயார் அவரிடம் தனது மகனை கொன்றுவிட்டதாக கதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாசர்பாடி காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் பவுன்ராஜ் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் நேற்றிரவு குற்றவாளிகளை கைது செய்ய, வியாசர்பாடி எம்.எம்.கார்டனுக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த ரவுடிகள் கதிர் (எ) கதிரவன் (32), வல்லரசு(19) மற்றும் கார்த்திக் (32) ஆகியோர் பவுன்ராஜை கத்தியால் தாக்கி விட்டு தப்பினர். இதில்  காவலர் பவுன்ராஜுக்கு தலையில் 2 இடங்களில் வெட்டுக்காயங்களும், காவலர் ரமேஷுக்கு தோள்பட்டையில் காயமும் ஏற்பட்டது.

காயமடைந்த போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  படுகாயமடைந்த காவலர் பவுன்ராஜை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தப்பிச் சென்ற குற்றவாளிகளில் வல்லரசு மாவதரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.எம்.டி.ஏ டிரக் பார்க்கிங் யார்டு பின்புறமுள்ள காலி மைதானத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று அதிகாலை சுமார் 4.00 மணிக்கு, தனிப்படை போலீஸார் வல்லரசுவை பிடிக்க அங்கு சென்றனர்.

அப்போது, வல்லரசு கத்தியுடன் திடீரென பாய்ந்து உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார் மற்றும் தீபன் ஆகியோரை தாக்கியுள்ளார். தற்காப்புக்காக காவல் ஆய்வாளர், வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. போலீஸ் என்கவுன்டர் என்பது திட்டமிடப்பட்ட கொலை என்று வல்லரசுவின் தந்தை சாமிக்கண்ணு தெரிவித்துள்ளார். வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறிய அவர், வல்லரசு, கடந்த 2 ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வந்தார் என்று கூறியுள்ளார்.

வல்லரசு என்கவுண்டர் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலும், வல்லரசுவின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பொன்னேரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி விசாரணை நடத்தினார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரவுடி வல்லரசுவின் உடலை பார்வையிட்ட மாஜிஸ்திரேட் வல்லரசுவின் தாயார் கருப்பாயிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது கருப்பாயி அவரிடம் கதறி அழுதபடி தனது மகனை போலீஸார் சுட்டுக்கொன்றதாக தெரிவித்ததாகவும்  மகன் சாவில் சந்தேகம் உள்ளது என புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x