Published : 15 Jun 2019 07:28 PM
Last Updated : 15 Jun 2019 07:28 PM

கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான தலைக்கவசம்: போக்குவரத்து போலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்

தலைக்கவசம் அணியும் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக சென்னை போக்குவரத்து போலீஸார் கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமான தலைக்கவச பொம்மையை வைத்துள்ளனர்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. தலைக்கவசம் கட்டாயம், பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கும் வேலையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். அன்றைய ட்ரெண்டைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். உதாரணமாக நேசமணி நலமா ட்ரெண்ட் உருவானபோது மேலிருந்து விழும் சுத்தியலால் உங்கள் தலையைப் பாதுகாக்க ஹெல்மெட் அணியுங்கள் என்ற விளம்பரம்.

அதேபோன்று சாலையில் எமதர்மன்போல் வேஷமிட்டு பாசக்கயிறுடன் வாகன ஓட்டிகளை மடக்கும் யுக்தி என பல உண்டு. தற்போது சென்னை கடற்கரைச் சாலையில் பிரம்மாண்ட ஆறடி உயர தலைக்கவசத்தை உயரமான இடத்தில் பார்வையில் படும்படி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x