Last Updated : 11 Jun, 2019 12:00 AM

 

Published : 11 Jun 2019 12:00 AM
Last Updated : 11 Jun 2019 12:00 AM

தொல்லியல் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் மோதலா?- கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ரத்து: தொல்லியல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நேற்று தொடங்கப்படவிருந்த 5-ம் கட்ட அகழாய்வுப் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய தொல்லியல் துறை (பெங்களூரு) பிரிவு சார்பில், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ல் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 3 கட்டங்களாக அகழாய்வு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை விரும்பவில்லை. இதையடுத்து 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையே மேற்கொண்டது. இப்பணியை தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையிலான குழு மேற்கொண்டது.

இந்த அகழாய்வு கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப்.30 வரை நடைபெற்றது. இதில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. 4-ம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில், 5-ம் கட்ட அகழாய்வு நடத்த, தமிழக அரசு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்காக கொந்தகையைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தேர்வு செய்து சுத்தப்படுத்தி வைத்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதமே அகழாய்வு தொடங்க இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் அகழாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் -அதிகாரிகள் மோதலா?

இதற்கிடையே, திடீரென அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைப்பதற்காக ஜூன் 10-ம் தேதிக்கு அகழாய்வுப் பணி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நேற்றும் அமைச்சர் வராததால் அகழாய்வுப் பணி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சருக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலால்தான் அகழாய்வுப் பணி ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் 2.10 ஏக்கரில் ரூ.1 கோடி செலவில் தொல்லியல் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தள்ளிப் போவதால் அருங்காட்சியக கட்டுமானப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணி எப்போது தொடங்கப்படும் என தெரியாததால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: 5-ம் கட்ட அகழாய்வுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாதது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணங்களால் அகழாய்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிதி ஒதுக்கியுள்ள நிலையில் அகழாய்வை தாமதப்படுத்தி வருகின்றனர்.

அகழாய்வை அதிகாரிகளே தொடங்கிவிடலாம். இதற்குமுன் அதிகாரிகளே அகழாய்வை தொடங்கினர். ஆனால், தற்போது அமைச்சரை காரணம் காட்டி தாமதப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தொல்லியல் ஆர்வலர்கள், நீதிமன்றம் வற்புறுத்தலால்தான் கீழடி அகழாய்வுப் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது.

இந்த அகழாய்வில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக தொல்லியல் அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். ஆர்வமுள்ள அதிகாரிகளை நியமித்து தொல்லியல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “உயரதிகாரிகளிடம் இருந்து உத்தரவு ஏதும் வராததால் அகழாய்வுப் பணியைத் தொடங்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x