Published : 04 Jun 2019 04:28 PM
Last Updated : 04 Jun 2019 04:28 PM

பாரதியார் தலைப்பாகையில் காவி திணிப்பா?- மாற்றமோ, திருத்தமோ நிபுணர் குழுவே முடிவு செய்யும்: பா.வளர்மதி கருத்து

12-ம் வகுப்பு பொதுத்தமிழ் புத்தகத்தில் பாரதியார் தலைப்பாகையில் காவி நிறம் பூசப்பட்டிருக்கும் சர்ச்சையில், படத்தில் மாற்றமோ திருத்தமோ நிபுணர் குழுவே முடிவு செய்யும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு பொதுத்தமிழ் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள பாரதியார் படத்தில் தலைப்பாகைக்கு காவி நிறம் பூசப்பட்டிருக்கிறது.

இது தமிழக அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முண்டாசுக் கவி என்றாலே வெள்ளைத் தலைப்பாகையும் கருப்பு கோட்டுமே இதுவரை குழந்தைகளின் மனதில் உருவகமாகி நின்ற நிலையில் தற்போது பாரதியாரின் தலைப்பாகைக்கு காவி நிறம் பூசப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்பு தமிழ்ப் புத்தக அட்டையில் உள்ள பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருந்தது.

பாரதியாரின் தோற்றத்தில் கூட காவியைத் திணிக்க அரசு முயல்வதாக கருத்துகள் வெளியாகின.

இதன் நீட்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர். அட்டையில்தான் இந்த மாற்றமா? அல்லது உள்ளே இருக்கின்ற பொருள்களிலும் மறைமுகக் காவித் திணிப்பு இருக்கின்றதா என்பதை, கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

இந்த சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதியை 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டோம்.

அப்போது அவர், "நேற்று நாங்கள் பாடநூலை வெளியிடும்போதே இந்தக் கேள்வியை அமைச்சர் செங்கோட்டையன் முன்வைத்தார். பொதுவாக பாடநூலைத் தயாரிக்கும் குழுவினர்தான் அட்டைப் படத்தில் என்ன மாதிரியான படங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் முடிவு செய்வார்கள். இதே பதிலைத்தான் நான் அமைச்சரிடமும் கூறினேன். உங்களுக்கு இதில் கூடுதல் விவரம் வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆனால், பாடநூலில் மாற்றமோ திருத்தமோ செய்ய வேண்டுமென்றால் அதை நிபுணர் குழுதான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

யார் அந்த ஓவியர் என்று கண்டுபிடியுங்கள்?

இது தொடர்பாக மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனைத் தொடர்பு கொண்டோம். அவர் இது குறித்துப் பேசும்போது, "ஊடகவியலாளர்கள் என்னைப் போன்றோரிடம் கருத்து கேட்பதைக் காட்டிலும் யார் அந்த ஓவியர் என்பதைக் கண்டுபிடியுங்கள். அவரது பின்புலம் என்னவென்பதைக் கண்டுபிடியுங்கள்.

 

 

70 ஆண்டுகளாக நாம் பாரதியாரின் புகைப்படத்தை வரைந்தும் பார்த்தும் வருகின்றோம். அவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பத்திரிகைகளில் புகைப்படங்கள் வருகின்றன. என்றாவது இப்படி ஒரு காவி தலைப்பாகையுடன் பாரதியை நாம் பார்த்ததுண்டா? கல்வித்துறைதான் ஊழல் நிறைந்த துறையாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் எந்த தகவல் கோரி மின்னஞ்சல் அனுப்பினாலும் பதிலே வராது. இப்படி ஒரு துறையில் இதற்கு எங்கிருந்து விளக்கம் கிடைக்கப்போகிறது" என எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x