Published : 04 Jun 2019 04:07 PM
Last Updated : 04 Jun 2019 04:07 PM

இவ்வளவுக்குப் பிறகும் மெரினா கடற்கரையில் பைக் ரேஸ்: 21 பேர் கைது

கடந்த 3 நாட்களாக சென்னையில் பைக் ரேஸ் குறித்த பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் இருக்க நேற்றும் ரேஸ் ஓட்டிய 21 பேர் சிக்கினர்.

கடந்த சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸ், வீலிங் செய்வது, ஸ்டாண்டுகளை தரையில் தேய்த்து தீப்பொறி உருவாக்குவது என சாகசச் செயலில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 2 மணி நேரம் அவர்கள் கட்டுப்பாட்டில் மெரினா காமராஜர் சாலை இருந்தது. இந்நிலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் தடுத்தபோது அவர்கள் மோதலிலும் ஈடுபட்டனர். அன்று சில மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அன்று இரவு அண்ணா சாலையில் இதேபோன்று சாகசம் செய்த இளைஞர்களில் இருவர் ஓட்டிய பைக், கார் மீது மோதியதில் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் உயிரிழந்தார். ஓட்டி வந்தவர் காயமடைந்தார்.

அன்றே அடுத்த 5 மணி நேரத்தில் ஞாயிறு அதிகாலையில் மெரினா கண்ணகி சிலை அருகில் அதிவேகமாகப் பேருந்தை முந்த முயன்ற பாலாஜி என்ற இளைஞர் ஓட்டிய பைக், பேருந்து மீது உரசியதில் பைக் பின்னால் அமர்ந்து வந்த சாந்தகுமார் என்கிற கல்லூரி மாணவர் பலியானார்.பாலாஜிக்கு படுகாயம் ஏற்பட்டது.

மெரினா கடற்கறையில் ரேஸ் ஓட்டுபவர்கள் மீது அன்று இரவே வாகனத் தணிக்கை செய்து நூற்றுக் கணக்கானோரை ஞாயிறு இரவு போலீஸார் கைது செய்தனர். நேற்றிரவும் மீண்டும் வாகன சோதனை கடற்கரை சாலையில் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பைக் ரேஸ் மற்றும் அதிவேகத்தில் இயக்கிய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:

உமர் (18) - எம் கே என் ரோடு ஆலந்தூர், சாகுல் அமீது (18) -மடுவங்கரை, 1-வது தெரு ஆலந்தூர், அஜிஸ் (18) -அம்பேத்கர் நகர் 13- வது தெரு ஆதம்பாக்கம், தினேஷ்குமார் (21) - ரேகாலயா அப்பார்ட்மெண்ட், கொடுங்கையூர், மஸ்தான் (18) - மாருதி காலனி ஏழாவது தெரு கிண்டி, முகமது பாசில் (23) - திருவேங்கடம் தெரு எழும்பூர், ஷாரூக் (19) - லப்பை தெரு புதுப்பேட்டை, ரபீக் (20) - பாலமுத்து தெரு, திருவல்லிக்கேணி, சரத்குமார் (21)-  ஈடன் கார்டன் தெரு, போஸ் ரோடு ஜமாலியா, சையத் அப்துல் (18) புது தெரு மசூதி காலனி கிண்டி.

அழகிரி தெரு ஆலந்தூரைச் சேர்ந்த மீரான் என்பவரின் 15 வயது மகன், அழகிரி தெரு ஆலந்தூரைச் சேர்ந்த நவாஸ் என்பவரின் 17 வயது மகன், சுப்பிரமணியன் சுவாமி கோயில் தெரு ஆலந்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 17 வயது மகன், சவுரி தெரு ஆலந்தூரைச் சேர்ந்த நெயினா முகமது என்பவரின் 17 வயது மகன் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 3 மணியளவில் காந்தி சிலை - காமராஜர் சாலை சந்திப்பில் திருவல்லிக்கேணி துணை ஆணையர்,  உயர் நீதிமன்றம் துணை ஆணையர், போக்குவரத்து துணை ஆணையர் ஆகிய மூவரும்  இணைந்து நடத்திய வாகனத் தணிக்கையில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மேற்படி 21 பேர் சிக்கினர்.

அனைவரின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துள்ளனர். சென்னையில் இத்தனை களேபரங்களுக்குப் பின்னரும் இளைஞர்கள் ரேஸ் ஓட்டி சிக்குவது தொடர்கிறது.

18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது வழக்குத் தொடரவும் சிக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் முடக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x