Published : 04 Jun 2019 03:49 PM
Last Updated : 04 Jun 2019 03:49 PM

கல்விக் கண்ணைக் குத்தி, கலாச்சாரப் படையெடுப்பை பாஜக அரசு மேற்கொள்கிறது: கி.வீரமணி விமர்சனம்

கல்விக் கண்ணைக் குத்தி, ஒரு கலாச்சாரப் படையெடுப்பை பாஜக அரசு மேற்கொள்கிறது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 40 பக்கங்களில் சொல்லக்கூடியவற்றை 400 பக்கங்களுக்கு அலுப்பூட்டும் மொழிநடையில் தந்திருக்கிறார்கள். தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது ஆய்வுமுறை. ஆனால், முடிவுகள் எடுத்த பின் அவற்றுக்கு ஆதாரங்கள் தேடும் முயற்சியாகவே அறிக்கை உள்ளது.

ஆங்கிலம் 14% வீடுகளில் வீட்டு மொழியாக உள்ளதென்றும், அது பாமரர் மொழியன்று என்றும் அறிக்கை கூறுகிறது. ஆங்கிலம் கற்பதன் நோக்கம் அதை வீட்டு மொழியாக்குவதல்ல; பிற அறிவுகளைப் பெறுவதற்கான ஒரு சாதனமாகவே கற்பிக்கப்படுகிறது.

பள்ளிகள் மொழிகள் கற்பிக்கும் நிறுவனங்களல்ல. வட மொழி தொடக்கப் பள்ளி நிலையிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் என்பதும், காளிதாசரின் படைப்புகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் பெரும் அவலம். இந்தி கற்க விரும்புபவர் இந்தி பிரச்சார சபாவின் மூலமாகக் கற்கலாம். மத்திய அரசு நடத்தும் அஞ்சல்வழி இந்தி வகுப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். தேவைதான் உந்து சக்தியாக இருக்கும்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் அதிக மொழிகள் சேர்த்தால் கணிதம், அறிவியல் போன்ற பிற பாடங்கள் நீர்த்துப்போக வாய்ப்புண்டு. பள்ளிப்பருவம் இனிமையாக இருக்க வேண்டும். தனக்கென்று படிக்க இடமில்லாத மாணவரே பெரும்பான்மையோர் என்று அறியாது, படித்த நடுத்தர வர்க்கத்துக்கான கல்வி முறையால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கியே செல்லும்.

பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட மக்கள்

கல்வி என்பது சமுகத்தின் முதலீடு; கல்வி கற்பிப்பதற்கும், கற்பதற்கும் சாதி, தீண்டாமையுள்ள சமுகத்தில் தடைகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் சந்ததி சந்ததியினராக பல கோடி மக்களாவார்கள்!

தாய்மொழி, தவறின்றி எழுத, பேசத் தெரிந்த இளைஞர்கள் மிகச் சொற்பமே!

20 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டவர் தம் அரிய முயற்சியால்தான் நீதிக்கட்சி ஆட்சி, காமராசர் ஆட்சி, மீண்டும் திராவிடக் கட்சிகள் ஆட்சிகளில் - பல்வேறு கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டில் வெட்கக்கேடான ஒரு செய்தி - நம் நாட்டில்.

தாய்மொழியில் படிக்காமலேயே பட்டம் பெற்று வேலைக்குப் போய்விடும் இளைஞர் பட்டாளத்தின் தொகை ஏராளம். இன்னமும் தாய்மொழி தமிழை, தவறின்றி எழுத, பேசத் தெரிந்த இளைஞர்கள் மிகச் சொற்பமே. இவர்கள் பிஇ, எம்பிஏ போன்ற படிப்பைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள்.

தாய்மொழியில் படிக்க, எழுதத் தெரியாமல் கருகி வரும் வேதனையான நிலை. தமிழ் பட்டப் படிப்புகளுக்குச் செல்வோர் தொகையோ, கல்லூரி பல்கலைக்கழகங்களில் அரிதிலும் அரிது.

'சர்வம் சமஸ்கிருத மயம்' என்ற உள்நோக்கத்தோடு...

இந்நிலையில், மூன்று மொழிகளை கற்கவேண்டுமாம்; அதுவும் பிஞ்சுப் பருவத்தில். 'சர்வம் சமஸ்கிருத மயம்' என்ற உள்நோக்கத்தோடு இப்போது இக்கல்வித் திட்டம் நகர்த்தப்படுகிறது என்பதை போகப் போக நாடும், நம் மக்களும் புரிந்துகொள்வார்கள்.

தமிழ் செம்மொழித் தகுதியை, மத்திய காங்கிரஸ் அரசில் அரசில் இடம்பெற்ற நிலையில், திமுக தலைவர் கருணாநிதி தீவிர முயற்சிகள் எடுத்து, பெற்றும் தந்தார். அந்த செம்மொழி நிறுவனம், தினக்கூலி நிறுவனம்போல இன்றைய மத்திய - மாநில ஆட்சிகளில் கீழிறக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு அவலம்.

அதையொட்டியேதான் சமஸ்கிருதம் 'செம்மொழி' தகுதியைப் பெற்றது என்ற உண்மையைப் பரப்பிட வேண்டும்.

பதவியேற்ற ஆறு நாட்களுக்குள்..

ஆட்சிக்கு வந்து 6 நாட்களுக்குள் இப்படி கல்விக் கண்ணைக் குத்தி, ஒரு கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொள்கிறது மத்திய அரசு என்றால், மக்கள் புரிந்து கிளர்ந்தெழ வேண்டும்.

மாநிலக் கல்வி உரிமையைப் பறிக்கும் திட்டம் நுழைய தென்னாடு ஒருபோதும் இடம் தரக்கூடாது

ஒட்டகத்தை ஏமாற்ற ஒரு சிறு வைக்கோலை எடுத்து அதன் கண்முன் வித்தை காட்டி ஏமாற்றுவதுபோல, மும்மொழித் திட்டம் என்ற மாநிலக் கல்வி உரிமையைப் பறிக்கும் திட்டம் நுழைய தென்னாடு ஒருபோதும் இடந்தரக்கூடாது என்ற குரல் எங்கெங்கும் ஓங்கி ஒலிக்கவேண்டும். பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்க முன்வர வேண்டும்", என, கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x