Published : 26 May 2019 02:59 PM
Last Updated : 26 May 2019 02:59 PM

சமூக வலைதளங்களில் பரவிய விவசாயக் கடன் தள்ளுபடி; பாஜகவினரின் பித்தலாட்டம்: ஹெச்.வசந்தகுமார் காட்டம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்குச் சொந்தமான நிறுவனங்களில் விவசாயக் கடன்களை ரத்து செய்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வசந்தகுமார் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் விவசாய அடிப்படையில் வைத்திருக்கும் கடன்கள் முழுமையாக தள்ளுபடியாக இருப்பதால் மக்கள் அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் வருகிற 30-ம் தேதிக்குள் வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் கார்டு ஆகியவற்றை நேரில் எடுத்துச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்நிலையில் வசந்தகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில் இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''மேற்கொண்ட செய்தி தற்பொழுது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

இச்செய்தி உண்மையல்ல. பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம். தோல்வியின் விரக்தியில் பாஜகவினர் செய்யும் பித்தலாட்ட வேலை.  இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x