Published : 25 May 2019 07:50 PM
Last Updated : 25 May 2019 07:50 PM

ராகுல் போன்ற தலைவர்களை காலம் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்: ஜோதிமணி பேட்டி

கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஜோதிமணி தாமதமாகத் தான் அறிவிக்கப்பட்டார். அவர் காங்கிரஸின் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. இப்போது, 6 லட்சத்து 95,697 வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். மக்களவை துணை சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரையை விட 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் இரண்டிலும் தோல்வி கண்டவர் ஜோதிமணி. ஆனால், இடையறாத பிரச்சாரத்தாலும், மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையாலும் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மக்கள் நலனுக்காக சில வேளைகளில் காங்கிரஸ் கட்சியிடமே முரண்பட்டிருக்கிறார். அவருடைய வெற்றி குறித்தும், காங்கிரஸின் படுதோல்வி குறித்தும் ஜோதிமணியிடம் பேசினோம்:

தேர்தல் களம் எப்படி இருந்தது? இந்த வெற்றியை எப்படி உணருகிறீர்கள்?

களம் நிச்சயமாக வெகு கடினமாக இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரூர் தொகுதியில் இரண்டு மாநில அமைச்சர்கள் உள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினர். எங்களின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடைசி நேர பிரச்சாரத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஆனால், நாங்கள் நேர்மையற்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அடக்குமுறைகள் வந்தாலும் அமைதியாக இருந்தோம். எங்களின் நிலையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் புரிந்துகொண்டனர். மக்கள் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் என்பதன் அடிப்படையில் தான் எங்கள் பிரச்சாரம் அமைந்தது.

என்னை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னரே, நல்லவர், நேர்மையானவர் என்ற பெயர் எனக்கு இருந்தது. ஆனால், எனக்கு பொருளாதார வசதியில்லை என கூறினர். என்னை வேட்பாளராக தேந்தெடுத்த பின்னர், 'பணம் இல்லாதவர்கள் எப்படி தேர்தலில் ஜெயிப்பார்?' என்ற ரீதியில் விமர்சனத்தை முன்வைத்தனர்.

நேர்மையான, மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளை நிறுத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்தார். அதேபோல், சாதாரண பின்புலத்திலிருந்து வந்த கேரளாவின் ரம்யா ஹரிதாஸ் போன்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார்.

அந்த தலைவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை கரூர் தொகுதி மக்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். மகத்தான வெற்றியை மக்கள் அளித்திருக்கிறார்கள். நான் எம்.பி.யாகி விட்டதாக பார்க்கவில்லை. சாதாரண மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரை உங்களுக்கு கடினமான வேட்பாளராக இருந்தாரா? அவர் என்ன மாதிரியான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்?

ஜோதிமணியிடம் பொருளாதார வசதியில்லை, அதனால் அவர் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பதுதான் தம்பிதுரையின் ஒரே பிரச்சாரமாக இருந்தது. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பணம் இருப்பவர்கள் தான் போட்டியிட வேண்டும் என இந்திய ஜனநாயகம் எங்கு சொல்கிறது? பொறுப்புமிக்க மூத்த அரசியல்வாதி இந்த அடிப்படையான அரசியலமைப்பைக் கூட புரிந்துகொள்ளவில்லை. அப்படி அவர் சொன்னது தவறு.

அதிமுகவின் மூத்த தலைவர் என்ற முறையில் நாங்கள் அவரை மதிக்கிறோம். தனிநபர் விமர்சனங்களில் இறங்கவில்லை. ஆனால், மக்கள் அவருக்கு சரியான பாடத்தை புகட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் எங்களுக்கு வாக்குகள் குவிந்தன. மக்களை அவர் சந்தித்ததே இல்லை.

மக்களுக்காக அவர் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. அவர் செய்த ஒரே சாதனை 45 கல்லூரிகளை கட்டியதுதான். கரூர் தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி கொண்டு வரக்கூட அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. அதற்கு எந்த தீர்வையும் காணவில்லை.

கால்நூற்றாண்டுக்கான பணிகளை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய பணிகள் எனக்கு இருக்கின்றன. அவர் அணுகுமுறைகளுக்கு நேர் எதிராக மக்கள் என் குணத்தை புரிந்துகொண்டார்கள். பிரச்சினைகளுக்காக களத்தில் நிற்பேன், போராடுவேன் என மக்கள் நம்பினார்கள்.

உணர்வுப்பூர்வமாக அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக என்னை பார்த்தனர். ஒவ்வொரு பிரச்சாரத்திலும் மக்கள் கூடினர். குழந்தைகளுடன் எனக்காக காத்திருந்தனர். அன்பை பொழிந்தார்கள். வெயிலில் ஏன் குழந்தையுடன் நிற்கிறீர்கள் என்று கேட்டால், "இல்ல உன்ன பாத்துட்டு போகலாம்னு இருந்தோம்"ன்னு சொல்லுவாங்க. எங்களுக்கு விழுந்தது வாக்கு அல்ல, அன்பும் நம்பிக்கையும். அதனை நாங்கள் காப்பாற்றுவோம்.

பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கட்சி முடிவுக்குள்ளேயே முரண்பட்டிருக்கிறீர்கள்? இது நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்குமா?

தமிழக கலாச்சாரம், மொழி என எல்லாவற்றையும் கடந்த ஐந்தாண்டுகளாக பாஜக ஆட்சி ஒடுக்கியது. பொருளாதார ரீதியாகவும், ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் கடும் பின்னடைவு தமிழகத்தில் ஏற்பட்டது. 15-வது நிதிக்குழு பிரச்சினை உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச்சாலை என தமிழகத்தை அடக்கினர். இப்போதும் பாஜகவுக்கு பெரும்பான்மை ஆட்சி கிடைத்திருக்கிறது.

தவறுகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டு தமிழகத்தை சரியான வழியில் நடத்துவார்கள் என நம்புகிறேன். ஒருவேளை பழைய தவறுகளை மோடி அரசாங்கம் மீண்டும் செய்ய துணியுமானால், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் நாங்கள் வலிமையான போர்க்குணத்தோடு நாடாளுமன்றத்தில் போராடுவோம்.

அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கரூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகளும் அரசிடம் எடுத்துச் செல்லப்படும். அதற்கு சுமூகமான வழியில் தீர்வு காண்போம். ஒருவேளை ஒத்துழைக்காவிட்டால், எப்போதும்போல போராட்டக்களம் தயாராகவே இருக்கும்.

உங்களையும் சேர்ந்து 5 எழுத்தாளர்கள் எம்.பியாகியிருக்கிறீர்கள். திமுக கூட்டணியின் அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தனித்த குரலாக இருப்பீர்களா?

தமிழகத்தில் திமுக கூட்டணி மிகச்சிறந்த பன்மைத்தன்மை வாய்ந்த வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறார்கள். சென்ற முறையும் தமிழகத்திலிருந்து 37 எம்பிக்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் மோடிக்கு அடிமையாக இருந்தனர். இம்முறை, தமிழக நலன்களுக்காக போர்க்குரலோடு இருப்போம். தமிழக மக்களின் குரலாக நாங்கள் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

தமிழகத்தில் 3 பெண்கள் உட்பட இந்தியா முழுவதும் 78 பெண்கள் நாடாளுமன்றம் செல்கிறார்கள். இந்த தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கொடுப்போம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இனி அதனை பாஜக எப்படி அணுகப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பிரதிபலித்தவர் சாக்‌ஷி. அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை கவலையுடன் அணுக வேண்டியிருக்கிறது.

காங்கிரஸின் படுதோல்வியை எதிர்பார்த்தீர்களா? இந்த தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?

மிக நிச்சயமாக இல்லை. இந்த தோல்வி மிக அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். இதனை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. 2014-லிருந்து இருந்த அரசாங்கம் கொடுங்கோன்மை அரசாங்கமாக இருந்தது.

மக்களையும் தேசத்தையும் மதிக்காத ஒரு அரசாங்கம். 5-6 பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்திய அரசாங்கம். காலம்காலமாக அன்பும் நம்பிக்கையும் ஒற்றுமையும் விதைக்கப்பட்ட ஒரு மண்ணில் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் பிரிவினையயும் உருவாக்கியுள்ளனர்.

அப்படிப்பட்ட ஆட்சியை, களத்திலும், நாடாளுமன்றத்திலும் 5 ஆண்டுகாலம் எதிர்த்து போராடிய கட்சி, இப்படிப்பட்ட தோல்வியை அடைந்திருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு மட்டும் அல்ல, ஒரு தேசத்திற்கே ஏற்பட்ட பின்னடைவு.

காங்கிரஸின் தோல்விக்கு பிரதான காரணங்கள் என்னென்ன?

2014-ல் நரேந்திர மோடி ஜெயித்த போது ஒரு கொண்டாட்ட மனநிலை இந்தியாவில் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. நிறைய பேர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மக்கள் பதட்டப்படக் கூடிய சூழலில் தான் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, என பெரும்பான்மையாக, தனக்கென இருக்கின்ற மொழி அடையாளம், கலாச்சாரம், பண்பாட்டை மதிக்கின்ற மாநிலங்கள் மிகத்தீவிரமாக நரேந்திரமோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஆனால், ஒற்றைக்கலாச்சாரம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்கின்ற மாநிலங்கள், இந்து மதத்திற்கும் இந்துத்துவாவுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை உணராமல் அதற்கு பலியாகியிருக்கின்றனர் என நினைக்கிறேன். சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்கட்சிகளும் அடுத்த 5 ஆண்டுகளில் அணுக வேண்டும். தோல்வி குறித்த விவாதங்கள் கட்சிக்குள் தொடர்ந்து நடக்கும். மோடியும் ஆர்எஸ்எஸ்-ம் இந்தியாவை சூறையாடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எதிர்கட்சியான காங்கிரஸுக்கு இருக்கிறது. அதனை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் அமைத்த வலுவான கூட்டணியை காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் அமைக்க தவறிவிட்டதா?

எல்லா மாநிலங்களிலும் கூட்டணி அமைத்திருக்கிறோம். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் போன்ற பல மாநிலங்களில் கூட்டணி அமைத்திருக்கிறது. சில மாநிலங்களில், பல்வேறு காரணங்களுக்காக தலைவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என முடிவு செய்தனர். அது அவர்களின் நலன் சார்ந்த ஒரு முடிவு. அதற்கு எப்படி காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க முடியும். தேவைப்பட்டால், பிரதமர் பதவியை விட்டுத் தருகிறோம் என்று கூட சொன்னோம். இதையெல்லாம் தேசத்தைக் காப்பதற்காகத் தான் செய்தோம்.

பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காதது தோல்விக்கான காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே?

பிரதமர் வேட்பாளரைஅறிவிப்பதுபாஜகவுக்கு வேண்டுமானால் நன்மையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு அது இழப்பு. இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த நாடு. சுதந்திர போராட்ட தியாகிகள், சட்ட வல்லுநர்கள், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது, ஏன் அமெரிக்கா போன்று அதிபர் தேர்தலாக இருக்காமல், ஐரோப்பிய யூனியன் போன்று பிரதிநிதித்துவ அடிப்படையை ஏன் முன்மொழிந்தனர்?

இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், மதம் என, பல்வேறு இனக்குழுக்களின் தொகுப்பாக இருக்கிறது. ஒற்றைக் கலாச்சாரத்தை திணித்தால், நாடு பிளவுறும் என்றுதான், எல்லா மாநிலங்களின் கருத்தையும் அங்கீகரிக்கும், எல்லோருடைய அடையாளங்களையும் உள்வாங்கிக் கொள்கிற, எல்லோருடைய சித்தாந்தங்களையும் புரிந்துகொள்கிற ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என நினைத்தனர். அதுதான் இந்தியாவுக்கு நல்லது

மோசமான ஆட்சியை 5 ஆண்டுகாலம் பார்த்தோம். மீண்டும் அந்த ஆட்சி அமையும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நம் மொழி, இன, அடையாளத்துக்காக நாம் போராடுவதால் தானே, பாஜக நம் மீது 'கொலை வெறியுடன்' இருக்கின்றனர். பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தாமல் தேர்தல் நடப்பதுதான் இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது. அரசியலமைப்பு சாசனம் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தலை அணுகுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமித்ஷா வேண்டும் என எழும் குரல்களை எப்படி பார்க்கிறீர்கள்?

அமித்ஷா இந்தியாவுக்கே தேவையில்லை. அமித்ஷாவின் நம்பகத்தன்மை என்ன? குற்றப்பின்னணி கொண்டவர். கொலைகளுக்காக வழக்கு நடக்கிறது. அவர் மீது இல்லாத வழக்குகளே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தியாக உள்ளமும், மக்களின் மீது அன்பும் கருணையும் கொண்ட தலைவர்கள் தான் தேவை. அந்த தலைவரை காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி வடிவில் பெற்றிருக்கிரது.

ராகுல்காந்தி பிரச்சாரத்தை முன்னெடுத்த விதம் இந்த தேர்தலில் பலனளிக்கவில்லையா?

இந்தியாவின் ஜீவாதாரமன பிரச்சினைகளை ராகுல் இந்த தேர்தலில் எழுப்பினார். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், மாநில உரிமைகள் என இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயங்களை காங்கிரஸ் எழுப்பியது. மக்களிடம் பேசி மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. ராகுல்காந்தி வெறுப்பை விதைக்கிற மோடிக்கு எதிராக அன்பை விதைத்தவர்.

பிரிவினையை விதைத்த நரேந்திர மோடிக்கு எதிராக ஒற்றுமையை விதைத்தவர். பணக்காரர்களுக்கான ஆட்சி நடத்திய மோடி போன்று இல்லாது, சாதாரண ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்கான குரலாக ஒலித்தவர். இந்த சூழலில் இருந்து காங்கிரஸ் கட்சி வெகு விரைவில் மீண்டு வரும்.

ஜீவாதாரமான பிரச்சினைகளுக்கு பாஜக பதில் சொல்லாமல், மக்களை பிரிக்கும், உணர்வுப்பூர்வமாக அவர்களை பிளவுப்படுத்தும் விஷயங்களை முன்வைத்தனர். அது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை வருங்காலம் நிரூபிக்கும். பாஜக மக்களுக்கான அரசாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாவிட்டால், களத்தில் நின்று காங்கிரஸும், காங்கிரஸ் தலைவரும் போர்க்குணத்தோடு போராடுவார்கள்.

ராகுல்காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கிறதே?

வெறுப்பும் பிளவும் பரவியிருக்கும் ஒரு நாட்டில், அன்பையும், எளிமையையும், கண்ணியத்தையும் விதைக்கும் தலைவர் அவர். திருமணம் கூட செய்துகொள்ளாமல் மக்களுக்காக சிந்திக்கும் தலைவர் அவர்.

ராகுல்காந்தி போன்ற தலைவர் உருவாக ஒரு தேசத்தில் பல்லாண்டு காலம் பிடிக்கும். தைரியமும், நம்பிக்கையும் நிறைந்த தலைவர். அவர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? நாட்டை சுடுகாடாக்காமல் காப்பாற்றிய தலைவர். இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்திய மக்களுக்கு காவலனாக அவர் இருப்பார். மோடி அரசின் சிம்ம சொப்பனமாகவும் அவரே இருப்பார்.

அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் நிறைய தேர்தலில் தோற்றிருக்கிறார். ஆனால், ஒரேயொரு முறை அவர் அமெரிக்காவின் அதிபரான போது, அமெரிக்காவின் தலையெழுத்தை அவர் மாற்றி எழுதினார். கறுப்பின மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்தார். அந்த மாதிரியான தலைவர்களை காலம் தாமதமாக புரிந்துகொள்ளும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x