Last Updated : 25 May, 2019 12:00 AM

 

Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

டெல்டா மாவட்டங்களில் அமமுகவின் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது: மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவியதுடன், டெபாசிட்டையும் இழந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அதிமுகவில் மன்னார்குடி என்றாலே ஜெயல லிதாவின் தோழி சசிகலாவை குறிக்கும் அளவுக்கு, அவரது உறவினர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு பெற்று திகழ்ந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவிலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி அமைப்பை ஏற்படுத்திய டிடிவி.தினகரன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக பதவியேற்று, அமைப்பின் பொதுச் செயலாளராக சசிகலாவை அறிவித்தார்.

மன்னார்குடியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் சசிகலாவின் உறவினர்கள் பரவலாக இருப்பதால், அமமுகவுக்கு இங்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, டிடிவி.தினகரன் தமிழகத்தில் வேறு பகுதிகளைவிட டெல்டா மாவட்டங்களில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடிவு செய்து, மாதம் ஒரு முறையாவது டெல்டா மாவட்டங்களுக்கு வந்து கட்சியினரை சந்தித்து வந்தார். அவர் ஒவ்வொரு முறை வரும்போதும், நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்சியில் சேரும் நிகழ்ச்சி தவறாமல் இடம்பெற்று வந்தது.

இதற்காக டிடிவி.தினகரன், ‘மக்கள் சந்திப்பு இயக்கத்தை' முதன்முதலாக டெல்டா மாவட்டங்களிலேயே தொடங்கி பல்வேறு கிராமப்புறங்களுக்குச் சென்று அமமுகவை வளர்த்து வந்தார். பின்னர்தான், தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமமுகவினர் மத்தியில் கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதில், டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளிலும், தஞ்சாவூர், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி.தினகரன்.

தொடர்ந்து, டிடிவி.தினகரன் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மிரண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், “தேர்தலில் அமமுக வெற்றி பெற்றவுடன், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மீண்டும் பெறுவோம்” என தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி.தினகரன் பேசினார். எப்படியும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலாவது எம்எல்ஏ அல்லது எம்பியாகி விடுவோம் என நினைத்து அமமுகவினர் தேர்தலில் கடுமையாக பணியாற்றி வந்தனர்.

ஆனால், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் டெல்டா மாவட்டங்களில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்ததுடன், டெபாசிட் தொகையையும் இழந்தனர். இந்த தோல்வியை எதிர்பார்க்காததால், அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x