Last Updated : 25 May, 2019 12:00 AM

 

Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

மதுரை மக்களவை தொகுதியில் அதிமுகவை புறக்கணித்த முதல் முறை வாக்காளர்கள்

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை முதல் முறை வாக்காளர்கள் புறக்கணித்தது மார்க்சிஸ்ட் வேட்பாளரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி யில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜ்சத்யனை தோற்கடித்தார்.இந்தத் தொகுதியில் மார்க்சிஸ்ட், அதிமுக, அமமுக இடையே கடும் போட்டி நிலவியது. திமுக கூட்டணிக் கட்சிகளைப் பொருத்தவரை வெங்கடசனை ஆதரித்து தீவிரமாக களப்பணியாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியினரைக் காட்டிலும் திமுகவினர் தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் பிரதான கூட்டணிக் கட்சியான பாஜகவினர் அவ்வளவாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மதுரை தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் என நினைத்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியை அழைத்து அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்திய பாஜகவினர், தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதும் ஒதுங்கிக் கொண்டனர்.

மதுரையில் பாஜக மாநில நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் தலைவர்களின் பிரச்சாரத்தில் தலைகாட்டியதோடு நின்றுகொண்டனர். அதிமுகவும் பிரச்சாரத்தில் பாஜக நிர்வாகி களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

இந்தத் தேர்தலில் ராஜ்சத்யனுக்கு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதேநேரத்தில் பிரபலமான எழுத்தாளர் என்ற முறையில் நடு நிலையாளர்கள், பொதுமக்கள், முதல் முறை வாக்காளர்கள், தொழிற்சங்கத்தினர் திமுக கூட்டணி கட்சியினர் அதிக ளவில் வெங்கடேசனுக்கு வாக்க ளித்துள்ளனர்.

முதல் முறை வாக்காளர்கள் சிலர் கூறுகையில், ‘கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களின் பிரச்சினை களுக்காக குரல் கொடுப்பவர்கள். மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். மக்களவையில் மதுரைக்காக குரல் கொடுப்பார். இதனால் அவ ருக்கு வாக்களித்தோம் என்றனர்.

இது குறித்து மதுரை மாவட்ட பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ’பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டது. அதிமுக தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால், அக்கட்சி மீதான அதிருப்தி, திமுக கூட்டணி பலம், காங்கிரஸ், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக மக்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் எப்போதும் மக்களவைத் தேர்தலில் ஒரு மாதிரியாகவும், பேரவைத் தேர்தலில் வேறு மாதிரியாகவும் மக்கள் வாக்களிப்பது வழக்கம்.

அது தான் இப்போது நடைபெற்றுள்ளது. முதல் முறை வாக்காளர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங் கத்தினர் கம்யூனிஸ்ட்டுக்கு வாக் களித்துள்ளனர். அதிமுகவினர் தேர்தல் பணியில் இன்னும் தீவிரம் காட்டியிருக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x