Published : 24 May 2019 11:48 AM
Last Updated : 24 May 2019 11:48 AM

பிறந்து 14 மாதங்கள்தான்; இது பெரிய சாதனை: கமல்ஹாசன் மகிழ்ச்சி

புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

"14 மாதங்களே ஆன குழந்தையை எழுந்து மக்கள் ஓட விடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை நம்பி நேர்மையாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்கும், எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நான் வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இவர்களுக்கு அற்புதமான ஒத்திகையையும், வரவேற்பையும் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம் .

எல்லோரும் எங்களை கொக்கரித்துக் கொண்டிருந்தபோது மக்களிடத்திலிருந்து எங்களுக்கு பாராட்டுகள் வந்தன. தப்பித்துவிட்டோம் என நான் பெருமூச்சு விடவில்லை. நல்ல வழியில், நேர்வழியில் சென்றால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் புத்தி சொல்லவோ, அவர்களிடம் நாங்கள் மன்றாடவோ செய்யவில்லை. இதில், தமிழகமே மார்தட்டிக் கொள்ளலாம்.

14 மாதங்களில் என்ன முடியுமோ அதனை செய்திருக்கிறோம், வேறு எங்கும் இப்படியொரு சரித்திரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வேறு கட்சியிலிருந்து உடைந்து, கிழிந்து வந்த கட்சியல்ல இது. புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான்.

மாற்றத்தை வேண்டி மக்கள் வாக்களித்தார்கள். மக்களின் வறுமையை வெல்வது கடினம் என்பதுதான் நாங்கள் கற்றுக்கொண்ட பெரும் பாடம். இத்தனை பணப்புயலுக்கு நடுவே இந்த இலக்கை நாங்கள் தொட்டதை பெரும் விஷயமாக கருதுகிறோம்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.

திமுக வெற்றி குறித்து அவர் கூறுகையில், "திமுகவின் வெற்றியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. அரசியலில் அப்படி ஏமாற்றமெல்லாம் கிடையாது. 13 ஆண்டுகள் வனவாசம் இருந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். நாங்கள் பிறந்து 14 மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன. இது எங்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூடிய சூழலை மக்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

பாஜகவின் வெற்றி குறித்து தெரிவிக்கையில், "அந்த வெற்றி மக்களின் தீர்ப்புதான். ஆனால், அது தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதில்தான் எனக்கு சந்தோஷம். தமிழகத்திற்கு தனி வெற்றி" என்று கூறினார்.

பாஜகவின் 'பி' டீம் சர்ச்சை குறித்து பதிலளிக்கையில், "எல்லா பக்கமும் இந்த கேள்வியை கேளுங்கள். இந்த கேள்வி எங்களுக்கு சற்றே அவமானமாக இருக்கிறது. நாங்கள் நேர்மைக்கு 'ஏ' டீம். தமிழ்நாடை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும், வைத்திருக்க வேண்டியது பாஜகவின் கடமை.

வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இதுதான் பிரதமருக்கு என்னுடைய வேண்டுகோள்" என, கமல்ஹாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x