Published : 23 May 2019 05:04 PM
Last Updated : 23 May 2019 05:04 PM

அதிமுக ஆட்சியை நிர்ணயிக்கும் 6 இழுபறி தொகுதிகள்

22 தொகுதி இடைத்தேர்தல் முடிவு பல சுற்றுகள் உள்ள நிலையில் அதிமுக ஆட்சியை நீடிக்கச் செய்யும் 6 தொகுதிகளில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்த 6 தொகுதிகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் தொகுதிகளாகும்.

மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை நாடே எதிர்பார்க்க அதிமுகவினர் மத்தியில் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திமுக 14 தொகுதிகளிலும், அதிமுக 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வரும் நிலையில் பல சுற்றுகள் எண்ணப்படவேண்டி உள்ளது. இதில் அதிமுக ஆட்சியை தீர்மானிக்கும் 6 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக 136 இடங்களைப் பெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 135 ஆனது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக வென்றதால் டிடிவி தினகரன் அங்கு எம்.எல்.ஏ ஆனார். டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 117 ஆனது.

இரண்டு எம்.எல்.ஏக்கள் மறைவு, ஒருவர் தகுதியிழப்பு காரணமாக மேலும் 3 பேர் குறைய தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இதில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு எப்படியும் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்படுவதால் 111 தான் உண்மையான எண்ணிக்கை.

இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளின் தேர்தல் முடிந்தால் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க 7 இடங்கள் தேவை. (அதில் சட்டப்பேரவை தலைவரும் அதிமுக எம்.எல்.ஏ கணக்கில் ஓட்டளிக்கிறார்) இதில் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

சட்டப்பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என தனியரசு தெரிவித்தாலும் அவர் நிலைப்பாடு கேள்விக்குறியே. தமீமுன் அன்சாரி இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கருணாஸ் எப்படி முடிவெடுப்பார் எனத் தெரியாது.

இதைக் குறிப்பிடக்காரணம் அதிமுக எதையும் நம்பாமல் பாதுகாப்பான எண்ணிக்கையை அடைய அதிமுகவுக்குத் தேவை 10 எம்.எல்.ஏக்கள். தமீமுன் அன்சாரி உள்ளிட்ட மூவரை சரிக்கட்டிவிடலாம் என்றால் தேவை 7 எம்.எல்.ஏக்கள். ஆனால் தற்போது முன்னிலை பெற்றுள்ளது 8 தொகுதிகள் மட்டுமே.

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரும் அதிமுக ஆட்சி கவிழ விடமாட்டோம் என முடிவெடுத்தால் 8 தொகுதிகள் வென்றால் பாதுகாப்பான எண்ணிக்கைதான். தற்போது 8 தொகுதிகளில் முன்னிலை மட்டுமே உள்ளது. அதில் 1.விளாத்திக்குளம், 2.பாப்பிரெட்டிப்பட்டி, 3.நிலக்கோட்டை, 4.மானாமதுரை, 5.சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அது பாதுகாப்பான ஒன்றல்ல. ஆட்சி நீடிக்க 7 முதல் 11 எண்ணிக்கை இருந்தால் யாரையும் நம்பாமல் பாதுகாப்பாக ஆட்சியைத் தொடரலாம். திமுக முன்னிலை பெற்றுள்ள 14 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் உள்ளது.

இருவருக்கும் இடையிலான இழுபறி தொகுதிகளாக 6 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 5 தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. ஆனாலும் இழுபறி நீடிக்கிறது. இதில் முன்னிலையில் உள்ள 5 தொகுதிகளையும் அதிமுக வென்றால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இழுபறி தொகுதிகளும் வித்தியாசமும்

அதிமுக முன்னிலை தொகுதிகள், வாக்குகள் வித்தியாசம்

1.சூலூர்-  1,180

2. பரமக்குடி- 4,160

3.சாத்தூர் – 3,557

4.அரூர் – 4,176

திமுக முன்னிலை உள்ள தொகுதிகள்

1. ஆண்டிப்பட்டி – 1,166

4. திருப்பரங்குன்றம் – 1,100

மேற்கண்ட 6 தொகுதிகளே ஆட்சி நீட்டிப்பா, இல்லையா என்பதை தீர்மானிக்கப் போகின்ற தொகுதிகள் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x