Published : 23 May 2019 12:33 PM
Last Updated : 23 May 2019 12:33 PM

10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பிரச்சாரங்களை வீடியோ வடிவில் வெளியிட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை விமர்சித்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் திமுக - அதிமுக பிரதான கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும், கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் நண்பகல் 12 மணி வரையிலான நிலவரப்படி, மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

3-வது இடத்தைப் பிடித்துள்ள தொகுதிகள்:

மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், புதுச்சேரி

முதல்முறையாக தேர்தல் களம் கண்ட அமமுகவையும், நாம் தமிழர் கட்சியையும் இத்தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ளியது.

அதேநேரத்தில், அரக்கோணம், ஆரணி, தருமபுரி, தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளில் முதல் ஐந்து இடங்களில் கூட மக்கள் நீதி மய்யம் வரவில்லை.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x