Last Updated : 23 May, 2019 10:07 AM

 

Published : 23 May 2019 10:07 AM
Last Updated : 23 May 2019 10:07 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை: தட்டாஞ்சாவடியில் குழப்பம்

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்குகள் எண்ணும் சூழலில் தற்போது வைத்திலிங்கம் 5,746 வாக்குகளும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 2,400 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. புதுவையில் 23 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

காரைக்காலில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், மாஹே, ஏனாம் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அந்தந்த பிராந்தியங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனி அறையில் வைத்திருந்தனர்.

புதுவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு 8 டேபிள்களும், காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒரு டேபிள்கள் அமைக்கப்பட்டிருந்தன. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நடைபெற்ற இத்தொகுதிக்கு தனியாக ஒரு டேபிள் அமைக்கப்பட்டிருந்தது.

முதல் சுற்றில் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ்நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாஹே, ஏனாம் ஆகிய 12 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதல் சுற்று வாக்குகள் எண்ணும் சூழலில் தற்போது வைத்திலிங்கம் 5,746 வாக்குகளும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 2,400 வாக்குகளும் பெற்றுள்ளனர். மூன்றாம் இடத்தில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் 278 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் தமிழ்மாறன் 21 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷர்மிளா பேகம் 7 வாக்குகளும் பெற்று பின்தங்கியுள்ளனர்.

தட்டாஞ்சாவடி தாமதம்:

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் சிக்கல் நிலவுகிறது. சுப்பையா நகர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் இல்லை எனவும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட கையொப்பம் ஒத்துப்போகவில்லை என குழப்பம் நிலவுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை:

வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை அத்துடன் தொலைக்காட்சி வசதி உட்பட எவ்வித வசதியும் செய்யாதது தொடர்பாக தேர்தல் துறையிடம் முறையிட்டனர். ஆனால், பலனில்லை. தொலைக்காட்சி வசதி மையங்கள் முழுக்க செயல்படவில்லை என்றும் விளக்கம் தந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x