Last Updated : 23 May, 2019 12:00 AM

 

Published : 23 May 2019 12:00 AM
Last Updated : 23 May 2019 12:00 AM

அங்கன்வாடிகளில் தொடங்கப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடையில்லை: அரசாணைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கலான அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கத் தடை விதிக்கவும், இதற்காக தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை சமூக நலத் துறைக்கு மாற்ற தடை விதிக்கவும் கோரி பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதிடும்போது, அரசு உதவிபெறும் தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,934 இடைநிலை ஆசிரியர்களும், ஊராட்சி ஒன்றியம், அரசு மற்றும் நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1,979 இடைநிலை ஆசிரியர்களும் உபரியாக உள்ளனர். இவர்கள்தான் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். இது அரசின் கொள்கை முடிவு. இதைக் கேள்வி கேட்க முடியாது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் 52,933 குழந்தைகளுக்காக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இல்லாததும், ஆங்கில வழிக் கல்வி இல்லாததும், கல்வித்தரம் இல்லாததும் காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்குவதுதான்.

இதுதொடர்பாக அரசு ஏற்கெனவே கொள்கை முடிவெடுத்துள்ளது. அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை குறைவதைத் தடுக்கவும்,ஏழைக் குழந்தைகள் நலனுக்காகவும் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், சமூகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டும் அரசு ஒரு கொள்கை முடிவெடுக்கும்போது அதில் தலையிட நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டஅளவு அதிகாரமே உள்ளது. அந்தக் கொள்கை முடிவு தன்னிச்சையானதாக இல்லாமலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகவும் இல்லாத நிலையில் அந்தக் கொள்கை முடிவு சரியா? தவறா?என்பதை ஆய்வு செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

குழந்தைகளுக்கு மழலையர் கல்வி நிலையில் இலவசமாக, தரமான கல்வி வழங்க புதியஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்குப் பதில், ஏற்கெனவே உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு அனைத்து உரிமையும் உண்டு. இதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தமிழக அரசு ஜூன் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இந்த வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு அறிவுரை

நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘ஆசிரியர்கள் கடவுளைப் போன்றவர்கள். அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக, குறிப்பாக குழந்தைகளின் நலனுக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவு களையும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அரசிடம் அதிகளவு சம்பளம் பெறும் ஆசிரியர்கள், அரசின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத் துக்கு வருவது தற்போது பேஷனாகிவிட்டது. நீதிமன்றத்துக்கு வந்து நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் ஆசிரியர்கள் தங்களது அறிவை யும், நேரத்தையும் கற்பித்தலுக்குச் செலவிட வேண்டும். ஆசிரியர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பு சமூகத்தில் ஏழைகளின் நலன், அங்கன்வாடி மையம், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x