Published : 21 May 2019 08:50 AM
Last Updated : 21 May 2019 08:50 AM

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 47 பேருக்கு போலீஸ் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை (மே 22) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சார் ஆட்சியர் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறையினர் சம்மன் அனுப்பி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை (22-ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்த பல்வேறு அமைப்புகள் காவல்துறையிடம் அனுமதி கோரின. ஆனால், யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை.

உயர்நீதிமன்றம் அனுமதி

பேராசிரியை பாத்திமா பாபு தலைமையிலான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி மே 22-ம் தேதி அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் நாளை (மே 22) அஞ்சலி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107-ன் கீழ் காவல் துறையினர் சம்மன் அனுப்பி வருகின்றனர். தூத்துக்குடி சார் ஆட்சியர் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த சம்மன் அனுப்பப்படுகிறது.

சிப்காட் காவல் நிலையம் சார்பில் 21 பேருக்கும், புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் 4 பேருக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் சார்பில் 14 பேருக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையம் சார்பில் 4 பேருக்கும், தூத்துக்குடி வடபாகம், மத்திய பாகம் காவல் நிலையங்கள் சார்பில் 4 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேஷ், பிரபு, ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் நேற்று சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் முன்பு ஆஜராகினர். அப்போது பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடமாட்டோம் என அவர்களிடம் உறுதிமொழி பெறப்பட்டது.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘காவல்துறையினர் அனுப்பியுள்ள சம்மனில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது குற்றச் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து சம்மன் அனுப்பினால் அதனை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x