Last Updated : 21 May, 2019 08:38 AM

 

Published : 21 May 2019 08:38 AM
Last Updated : 21 May 2019 08:38 AM

வாரம் ஒரு கிணறை தூர் வாரும் இளைஞர்கள்- `சமுதாய சாமுராய்’களுக்கு சபாஷ்!

நீரின்றி அமையாது உலகு’ என்பதை உணர்ந்த நம் முன்னோர், இயற்கை கொடுக்கும் நீரை சேமிக்க இலஞ்சி, ஊருணி, ஏரி, கண்மாய், கலிங்கு, குட்டம், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குளம், கூவம், கூவல்,  சிறை, சேங்கை, தடம்,  தனிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக்குளம், நீராழி, பொங்கு, பொய்கை, வலயம், வாளி, கிணறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கினர்.

இவற்றில், கிணறு என்பது நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டுள்ள  நீரை எடுப்பதற்காக  நிலத்தில் தோண்டப்படும் ஆழமான குழி. நிலத்தடிநீரின் மட்டத்தைப் பொறுத்தும், அதன் அமைப்பை பொறுத்தும் கிணறுகளின் பெயர்கள் ஆழிக்கிணறு, நடைகிணறு, தொடு கிணறு, பிள்ளைக் கிணறு, உறைகிணறு, கட்டுக்கிணறு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

தற்போது மக்களுக்குப் பெரிதும் உபயோகப்படக்கூடிய நீர்நிலைகளில் முக்கியமானது  கிணறு. முன்னோர் உருவாக்கிய கிணறுகளை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  இளைஞர்களின்  சேவையை  ஊரே மெச்சி வருகிறது. இவர்களைபோல, ஊருக்கு ஊர்  இளைஞர்கள் ஒன்றுகூடி,  நீர்நிலைகளைச் சீரமைத்தால் எதிர்கால சந்ததியினர் தண்ணீருக்கு சிரமப்படமாட்டார்கள்.

எப்போதாவது பொழியும்  மழைநீரை சேமித்துவைத்து, ஆண்டு முழுவதும்  குளிர்ந்த நீரை வழங்கும் கிணறுகளைப் பராமரித்து,  பாதுகாக்க ஊராட்சி நிர்வாகங்கள் முன்வருவதில்லை. இதனால்,  பொள்ளாச்சியை  சுற்றியுள்ள  பல கிராமங்களில்  நூற்றுக்கணக்கான கிணறுகள்  பராமரிப்பின்றியும், புதர் மண்டியும்,  தூர்ந்தும்  வருகின்றன.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் 65 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால், பல கிராமங்கள் நீரின்றித்  தவித்தன. அப்போது, கிணறு வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்,  பல்வேறு ஊர்களில் கிணறுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊற்று பார்த்து, 80 அடி முதல் 100 அடி ஆழம் வரை வெட்டிய கிணறுகளில் தற்போதும் தண்ணீர் உள்ளது.

1956-ல் புரவிப்பாளையம் கிராமத்தில் மாரி  என்பவரால் வெட்டப்பட்ட கிணறு, வற்றாத கிணறாக அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை தீர்த்து வந்தது.  `சேந்து கிணறு’ அழைக்கப்பட்ட அந்தக் கிணறு, கூட்டுக் குடிநீர்த்  திட்டத்தில் ஊருக்குள் மேல்நிலைத்  தொட்டிகள் கட்டப்பட்டு, வீதிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட பின்னர், பயன்பாடின்றிக் கைவிடப்பட்டது.

இதுபோன்ற கிணறுகளை தூர் வாரி,  சுத்தப்படுத்தினால் எதிர்காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று புரவிப்பாளையம்  பகுதி இளைஞர்கள் கருதினர். இதையடுத்து, `சமுதாய சாமுராய்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, கிணறுகளைத்  தூர்வாரும் பணியில் களமிறங்கினர். அந்த  அமைப்பில் உள்ள 40 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, வாரம் ஒரு கிணற்றைத் தூர் வாருவது என  முடிவு செய்தனர்.

அதன்படி,  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில்  புரவிப்பாளையத்தில் உள்ள கிணறுகளை  தூர் வாரும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் கூறும்போது, “தண்ணீர் பற்றாக்குறையால், விலை கொடுத்து குடிநீரை வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கிணறுகளைத் தூர்வார முடிவு செய்தோம்.

முதலில் புரவிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள,  80 அடி ஆழமான விநாயகர் கோயில் பொது கிணற்றை தூர் வாரினோம். கிணற்றைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றியபோது, 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கிடந்தன. அவற்றையும், நீரில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள் மற்றும் குப்பையையும், கிணற்றின் பக்கவாட்டுச்  சுவர்களில் முளைத்திருந்த சிறு செடிகளையும் அகற்றினோம். விவசாயி பிரபு ராம்,  மின் மோட்டார் கொடுத்து உதவினார். அதன் மூலம் 80 அடி ஆழத்துக்கு இருந்த,  துர்நாற்றம் வீசும்  தண்ணீரை வெளியேற்றினோம். மேலும், கிணற்றிலிருந்து ஒன்றரை டன் அளவுக்கு சேறு, சகதிகளை எடுத்தோம். பின்னர், கிருமி நாசினி, சுண்ணாம்பைக்  கொட்டி கிணற்றை தூய்மைப்படுத்தியுள்ளோம்.

இளைஞர்களின் தன்னார்வப் பணியை கண்ட இப்பகுதி மக்கள், தாங்களாக முன்வந்து உதவி செய்தனர். மக்கள் உதவியுடன் கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளோம். மேலும், கிணற்றில் குப்பை விழாமல் இருக்க வலை அமைத்து, வெள்ளையடித்துப்  புதுப்பித்துள்ளோம். கிணற்று நீரை ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆய்வக சோதனைக்கு அனுப்பியுள்ளோம். குடிக்க தகுதியானது என அறிக்கை வந்த பின்னர், மேல்நிலைத் தொட்டி மூலம் கிராமத்துக்கு குடிநீர் விநியோகிக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

தற்போது, பள்ளிவாசல் வீதியில் உள்ள பொதுக்  கிணற்றை தூர் வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் பாராட்டு பெரிதும் ஊக்குவிக்கிறது.  இந்தப் பணியைத் தொடர்வோம்” என்றார்.

தினமும் ஒருவருக்கு குறைந்தபட்சம் 106.80  லிட்டர் தண்ணீர் தேவை. தமிழகத்தில் ஏரி, குளம், குட்டை, கிணறு போன்ற நீர்நிலைகளின்  எண்ணிக்கை  குறைந்து கொண்டே செல்வதால், மக்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்கவும் முடிவதில்லை.

நிறைய தண்ணீர் தரையில் ஓடி, பள்ளத்தில் விழுந்து,  ஆற்றில் சேர்ந்து,  கடலில் கலந்து வீணாகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகங்கள் மூலம், குளம், குட்டை, பொதுக் கிணறுகளை தூர்வாரி பராமரித்து வைத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் தண்ணீர்ப்  பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x