Published : 21 May 2019 08:35 AM
Last Updated : 21 May 2019 08:35 AM

துக்ளக் தர்பாரில் அரசியல் தோரணம்- வெடிச் சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்

நடிகர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என ‘சோ’வுக்கு பல முகங்கள் உண்டு. குறிப்பாக அவரது அரசியல் நையாண்டி உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த அரசியல் நையாண்டியை மையமாகக் கொண்டு, அவரது கைவண்ணத்தில் உருவான ‘துக்ளக் தர்பார்’ என்ற நாடகம் மிகவும் புகழ் பெற்றது.

அவரது மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும், சமகால நிலவரத்தையும் நையாண்டி செய்து, துக்ளக் இதழின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த சத்யா எழுதி, இயக்கிய ‘துக்ளக் தர்பார்’ என்ற  நாடகம் கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன ஏற்பாட்டில் கோவையில் நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் துக்ளக் தர்பார் நாடகம் நடைபெற்றது. சென்னை யுனைடெட் விஷுவல்ஸ் டி.வி.வரதராஜன் குழுவினர் இந்த நாடகத்தை 60-வது முறையாக கோவையில் அரங்கேற்றினார்.

சொர்க்கத்தில் நாரதர், சோவை சந்தித்து உரையாடும் காட்சியில் தொடங்குகிறது  நாடகம்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தில், நல்லவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக முகமது பின் துக்ளக்கையும், அவரது அமைச்சர் பதூதாவையும் பூலோகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர் நாரதரும், சோவும்.

எதிர்க்கட்சித் தலைவர் மங்காத்தாவிடமும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தமிழக  முதல்வரிடமும், தேர்தலில் நல்லவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும்படி கோரிக்கை வைக்கிறார் துக்ளக்.

இருவரும் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை என்பதால்,  ஒரு தொலைக்காட்சி செய்தியாளரின் உதவியுடன் இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களையும் விலைக்கு வாங்கி, ரிசார்ட்டில் அடைத்து வைக்கிறார். பின்பு,  பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தமிழக முதல்வராகிறார் துக்ளக்.

அதற்குப் பிறகு, அவர் உருவாக்கிய சட்டங்கள்,  அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டுவந்தது என்பதை மிகவும் சுவாரசியமான காட்சி அமைப்புகளில்,  நகைச்சுவையான வசனங்களில், மிகச் சிறப்பாக மேடையேற்றினர் டி.வி.வரதராஜன் குழுவினர்.

குறிப்பாக, மங்கம்மாவாக வரும் எதிர்க்கட்சித் தலைவர், சமீபத்தில் அரசியலுக்கு வந்த திரைப்பட நடிகராக வரும் சங்கர், ஆளுங்கட்சியைச் சேர்ந்த  முதல்வர்,  முதல்வரின் பொதுச் செயலராக வரும் நடிகர் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நாடகத்தின் இடையிடையே சோ தோன்றும் காட்சிகள் இடம் பிடிக்கின்றன. அதற்காக, மறைந்த சோவைப் போன்றே தோற்றமளிக்கக் கூடியவரை நடிக்கவைத்துள்ளனர். இந்த கதாபாத்திரம் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. தேர்தலில் இடப் பங்கீட்டு பேரங்கள், கூட்டணிகள், அரசியல் கட்சிகளின் வசனங்கள், சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குழிபறித்துக் கொள்வது போன்ற சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளை நையாண்டி செய்தது, பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

நவீன நாடகங்களுக்கே உரிய முறையில் நவீனத்  தொழில்நுட்பங்கள் அனைத்தும் அரங்கில் புகுத்தப்பட்டு இருந்தது, நாடகத்தை தொய்வில்லாமல் பார்வையாளர்களை ரசிக்கச்  செய்தது.

பத்திரிகையாளர் சத்யாவின், சமூக விமர்சனம்,  அரசியல் விமர்சனம் கலந்த சாட்டையடி வசனங்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கரகோஷம் எழுந்தது. குறிப்பாக, சங்கர் கதாபாத்திரத்தின் வசனங்கள் மிகச் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தன. நாடக அரங்கத்துக்கு உள்ளும், வெளியுமாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்து, வாக்குப்பதிவு முடிந்த ஒரு சூழல் என்பதால், அரசியல் நையாண்டி நாடகத்துக்கு பெரிய வரவேற்பு நிலவியதைக் காணமுடிந்தது. மத்திய வயதை கடந்த பெரியவர்கள், குடும்பத்தலைவிகள், இளம் தலைமுறையினர் பெருமளவில் வந்து  நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x