Published : 21 May 2019 08:32 AM
Last Updated : 21 May 2019 08:32 AM

குழந்தை இலக்கியமும்... கோனார் தமிழ் உரையும்... கவிஞர் செல்லகணபதி

தொழில்நகரமான கோவையில், குழந்தைகளுக்கான இலக்கியத்தை வேரூன்ற வைத்தவர் குழந்தைக் கவிஞர் செல்லகணபதி. அதேபோல,  குறட்பா முதற்கொண்டு, திருவருட்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் என ஏராளமான பாடல்களுக்கு, எளிய முறையில் தெளிவுரையும், விளக்க உரையும் அளித்த  கோனார் தமிழ் உரையை பள்ளி மாணவர்களிடம் கொண்டுசேர்த்தவர் இவர்.

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கட்ரமணா சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். கண்டனூரிலிருந்து கோவைக்கு வந்து 53 வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும், மண் மொழி மாறாமல் பேசுகிறார்.

“எனக்கு புதுக்கோட்டை, அரிமளம் கிராமம் பூர்வீகம். அப்பாவுக்கு விவசாயம். அரிமளம் கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.  படிச்சேன். மேல படிக்க, எங்க மாமா பழனியப்பா உடன் கண்டனூர்  போயிட்டேன். அவர்கிட்டத்தான் வளர்ந்தேன். அங்கிருந்து சென்னை போய் பியுசி, பி.ஏ., எம்.ஏ. படிச்சேன்.

அரிமளம் பள்ளியில 9-ம் வகுப்பு படிக்கிறப்ப, எங்க அறிவியல் வாத்தியார் ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை. அந்த வகுப்பு எடுக்க ஆறுமுகனார்னு தமிழாசிரியர் வந்தார். கதை, கட்டுரை, கவிதைனு ஏதாவது ஒண்ணு எழுதுங்கனு  சொன்னார்.  நான் ஒரு கவிதை எழுதினேன். அதைப் படிச்ச ஆசிரியர், ‘உனக்கு கவிதை எழுதறதுக்கான ஆற்றல் நிறைய இருக்கு. தொடர்ந்து எழுது’னு பாராட்டினார். அதனால தொடர்ந்து கவிதை எழுத ஆரம்பிச்சேன். பிளஸ் 1 படிக்கும்போது, கவிதைப் போட்டியில எனக்கு முதல் பரிசு கிடைச்சது.

சென்னை லயோலா கல்லூரியில், ஆசிரியர்  முத்துக்கண்ணப்பன் ஊக்குவிச்சதால, கல்லூரி மலருக்கு கவிதை எழுதினேன். அதேபோல, பேராசிரியர் சுந்தரராஜன் சொல்லி, பாரதியார் பற்றி 16 வரியில் ஒரு கவிதை எழுதினேன். அப்போதைய மத்திய அமைச்சர் கே.எல்.ராவ்,  அதுக்காக எனக்கு பரிசு வழங்கினார்.

அப்புறம் பச்சையப்பா கல்லூரியில்  எம்.ஏ. தமிழ் சேர்ந்தேன். பேராசிரியர்கள் தெ.ஞானசுந்தரம், தண்டாயுதம், தமிழ்க்குடிமகன் எல்லோரும் நண்பர்கள் ஆனாங்க.

அங்கே நான் ஒரு கவிதைக்கான பரிசு வாங்கியபோது, அழ.வள்ளியப்பாவை சந்திச்சேன்.  சங்கு, டமாரம், அணில், பாலர் மலர், பூஞ்சோலைனு குழந்தைகள் பத்திரிகைகளை விரும்பி படிப்பேன். அப்ப அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்களுக்கு தீவிர ரசிகனா இருந்தேன்.

அந்த சமயம், என்கிட்ட பேசிய வள்ளியப்பா, ‘மரபுக்கவிதை, புதுக்கவிதை எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. நீ குழந்தைகளுக்காக எழுது’னு ஆசிர்வதிச்சார். அந்த உந்துதல், ஒரு கவிதை உருவாக காரணமாச்சு.

‘ஆடிக் களிக்கும் மயிலே வா, ஆட்டம் எனக்கு சொல்லித்தா,  பாடிக் களிக்கும் குயிலே வா, பாட்டுப் பாட சொல்லித்தா,  தாவும் மானே அருகே வா, தாவிக் குதிக்க சொல்லித்தா, கூவும் கோழி இங்கே வா, கூவி எழுந்திட சொல்லித்தா’னு கவிதை எழுதினேன். இந்த கவிதை ‘இலக்கிய உலகம்’ சிற்றிதழில் வெளியானது. அதை வள்ளியப்பா பார்த்துட்டு,  பாராட்டினார். அதே கவிதை, லங்கா ‘ஈழகேசரி’யில் மறுபிரசுரமாகி, அந்த இதழ் என் வீட்டுக்கு வந்தது. அதுக்கப்புறம், தொடர்ந்து 16 குழந்தைகள் பாடல் எழுதினேன்.

வண்ணப் படங்களுடன்...

1960-களில் வண்ணத்தில் புத்தகங்கள் வெளியிடுவது மிகக் குறைவு. செலவு அதிகம். நான் எழுதிய பாடல்களில், 13பாடல்களை  அழ.வள்ளியப்பா திருத்திக் கொடுத்தார். அதை வண்ணப் படங்களுடன் ‘வெள்ளை முயல்’ங்கிற தலைப்புல  வெளியிட்டோம் அதுக்கு நல்ல வரவேற்பு.

படிப்பு முடிச்சதும், தனியார் நிறுவனத்துல வேலைக்குப் போனேன். வேறு சில தொழில்களும் செஞ்சேன். எதுவும் ஒத்துவரலை. ‘பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்துல கணக்குகளை பராமரிச்சேன். அப்ப கோவையில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடுகளை, கவிஞன் பதிப்பகம் விற்றுவந்தது.

அவர்களிடம் கோனார் நோட்ஸ் விற்றதில் நிறைய பாக்கி இருந்தது. ‘பாக்கி தொகைக்குப் பதிலா, கடையை நீங்களே வச்சுக்குங்க’னு சொல்ல, அதை கவனிக்க நான் கோவைக்கு 1968-ல் வந்தேன். அந்தக் கடையை புதுப்பிச்சு, ‘பழனியப்பா பிரதர்ஸ் அன் கோ`வா மாற்றி,  கோனார் நோட்ஸுக்கு நிறைய சில்லறை விற்பனையாளர்களை உருவாக்கினேன். எல்லா பள்ளிகளிலும் கோனார் நோட்ஸ் இருக்கும் நிலையை உருவாக்கினேன்.  அந்த சமயத்துல, விஜயா வேலாயுதம் போன்றவர்கள் தொடர்பு கிடைக்க,  என் படைப்பிலக்கியமும் வளர்ந்தது” என்றார் கவிஞர் செல்லகணபதி.

சிறுவர்  பாடநூல், சிறுவர் கதைகள், சிறுவர் புதினம், குழந்தை இலக்கியத் திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, வாழ்வியல் கருத்தியல் கட்டுரைகள் என இதுவரை 44 நூல்கள் எழுதியுள்ளார் செல்லகணபதி. இதில் பல கவிதைகள்,  தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு, சிங்கப்பூர் அரசு பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.

25-க்கும் மேற்பட்ட விருதுகள்!

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, பபாசியின் குழந்தைக் கவிஞர் விருது, அழ.வள்ளியப்பா நினைவு சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது, கோவை நன்னெறிக் கழகத்தின் தமிழ்நெறிச் செம்மல் விருது, சென்னை விடியல் அமைப்பின் பாரதி விருது, காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் அடிப்பொடி விருது, சென்னை தமிழ்நூல் வெளியீடு விற்பனைக் கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, தமிழக அரசின் சிறந்த இலக்கியத்துக்கான விருது என 25-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள செல்லகணபதி, அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் தலைவராக இருந்து, ஆண்டுதோறும் குழந்தை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களுக்கு விருதும், பரிசும் அளித்து வருகிறார்.

“பொதுவாக எழுத்தாளர்களின் படைப்புகளை பெரியவர்கள் படிப்பார்கள்.  கடிதம் மூலமாகவோ, போன் செய்தோ பாராட்டுவார்கள். விமர்சிப்பார்கள். அதில் ஊக்கமும், உற்சாகமும் பெற்று,  அந்த எழுத்தாளர்கள் மேலும் நல்ல படைப்புகளை படைப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களின் நிலையோ வேறு. குழந்தைகள் புத்தகத்தை படித்து, அதில் இருக்கும் நல்ல அம்சங்களை உணர்ந்தாலும், யாரிடம் பகிர்ந்து கொள்ளவோ, அதை எழுதியவரைப் பாராட்ட வேண்டும் என்றோ தோன்றாது. வாசித்து விட்டு, விளையாடப் போய்விடுவார்கள். இவ்வாறு குழந்தைகளிடம் ஏற்படும் வாசிப்பு பழக்கம்தான்,  பின்னாளில் அவர்கள் பெரிய எழுத்தாளர்களின் கதையை, நாவலைப் படிக்க வைக்கக் காரணமாகிறது.

நான் எழுத வந்த காலத்தில், நிறைய குழந்தை எழுத்தாளர்கள் இருந்தனர்.  தமிழ்வாணன் போன்றவர்களின் துப்பறியும் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்தன. ஆனால், அதற்குப் பிறகு குழந்தை எழுத்தாளர்கள் குறைந்துவிட்டனர். அது வாசிப்பு உலகத்தில் பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது. இன்றைய இளைஞர்கள் யாரும் வாசிப்பதில்லை என்று குறைசொல்லத் தேவையில்லை. அவர்கள் குழந்தைகளாக  இருந்தபோது வாசிக்க புத்தகம் கொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்” என்று ஆதங்கப்படுகிறார் செல்லகணபதி.

2006-ல் இவரது ‘மணக்கும் பூக்கள்’ நூலை வெளியிட்டவர், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். இங்கே நல்ல எண்ணங்களே நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள். அதற்கு உதாரணம்தான் இது” என்றுகூறி விடைகொடுத்தார் செல்லகணபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x