Last Updated : 21 May, 2019 12:00 AM

 

Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM

நாடு முழுவதும் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு: எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காத ஆணையம்

மின்னணு இயந்திரங்கள் பழுது, அவற்றின் மீதான நம்பகத்தன்மை என சர்ச்சைகள் கிளம்பியபோதும் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காமல், அவற்றின் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம்.

பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து சொகுசு கார்களைத் தயாரிக்கும் சர்வதேச முன்னணி கார் நிறுவனங்கள்கூட, தாங்கள் தயாரிக்கும் 10 ஆயிரம் கார்களில் 10-ல் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளைக் குறையாக கருதி, கார் தயாரிப்பையே நிறுத்தி விடுவதில்லை. அந்த குறைகள் சர்வதேச தரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன.

குறிப்பிடும் தவறுகளை நிவர்த்தி செய்து, மேம்படுத்தப்பட்ட புதிய ரகங்களை வெளியிட்டு தங்கள் மீதான நம்பகத்தன்மையை அந்த நிறுவனங்கள் உறுதிசெய்து கொள்கின்றன. இது கார்களுக்கு மட்டுமல்ல; நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களுக்கும் பொருந்தும்.

நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த சின்னத்தை காட்டும் ‘விவிபாட்’ இயந்திரங்கள் என 39 லட்சத்து 60 ஆயிரம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஏப்.11-ல் நடைபெற்ற மக்களவை முதல்கட்ட தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமான மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 800 இயந்திரங்கள் பழுதடைந்து மாற்றப்பட்டன. ஏற்கெனவே மின்னணு இயந்திரங்கள் மீது சந்தேகத்தைக் கிளப்பி, பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று கூறிய அரசியல் கட்சிகள், இயந்திரப் பழுதை சுட்டிக்காட்டி தங்கள் கருத்தை மேலும் வலுவாகத் தெரிவித்தன. இருப்பினும் இந்த விஷயத்தில் எவ்வித சமரசத்தையும் தேர்தல் ஆணையம் செய்துகொள்ளவில்லை.

ஏப்.18-ல் நடைபெற்ற 2-ம் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 88,311 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 91,437 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

காலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியபோது 482 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 798 விவிபாட் இயந்திரங்கள் பழுதடைந்து மாற்றப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவின்போது 410 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 257 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 840 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

இந்த வகையில், அன்றைய தினம் மொத்தமாக 892 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 704 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,638 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இதைக் கொண்டு கணக்கிட்டால் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் 0.61 சதவீதமும், கட்டுப்பாட்டு இயந்திரங்களில் 0.79 சதவீதமும், விவிபாட்டில் 1.79 சதவீதமும் மட்டுமே பழுதடைந்துள்ளன. தொடர்ந்து கடந்த 19-ல் நடந்த 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலின்போது மின்னணு இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகள், அவற்றை சரிசெய்தது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:மின்னணு இயந்திரங்களைப் பொறுத்தவரை அவை பேட்டரியில் இயங்குபவை. தேர்தலுக்கு முன்னதாக அவை முதல் நிலையில் பரிசோதிக்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டன. அதன்பின்னரே வேட்பாளர்கள் சின்னங்கள் ஒட்டப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.

பழுதுக்கான காரணங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களில் கொண்டு செல்லும்போது சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரத்தை சரியாக இணைக்காமல், மாற்றி இணைத்ததால் பழுது ஏற்பட்டன. இதுதவிர, பேட்டரி இயங்காதது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் இயங்காதது, விவிபாட் இயந்திரத்தில் திடீரென ஒப்புகைச் சீட்டுகள் வராதது என பல்வேறு வகையான பழுதுகள் ஏற்பட்டன.

பழுதுகளைச் சீரமைக்க பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் மண்டல குழுக்களுடன் பணியில் இருந்தனர். சீரமைக்க முடியாத நிலையில் உடனடியாக தங்கள் கொண்டு வந்த இயந்திரத்தை மாற்றிக் கொடுத்தனர். வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது பழுதடைந்தால், அந்த இயந்திரத்தை அப்படியே சீல் செய்து வைத்துவிட்டு, புதியஇயந்திரம் பொருத்தப்படும். மாற்றப்பட்ட இயந்திரங்களில், சேதமடைந்தவை திருப்பியனுப்பப்படும். பழுதடைந்த இயந்திரங்கள் மீண்டும் சீரமைக்கப்படும். இவை அனைத்தும் வாக்குச்சாவடிகளில் உள்ள வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்தான் நடக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் உள்ள பாரத் மின்னணு நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய மின்னணு கழகம் ஆகியவை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்து வருகின்றன. தற்போது 3-ம் தலைமுறை இயந்திரங்கள்தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மின்னணு இயந்திரங்கள் இந்தியா தவிர நேபாளம், பூடான் மற்றும் நமீபியா, கென்யா, பிஜி தீவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, மாலத்தீவு, எகிப்து உள்ளிட்ட 3 நாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயந்திரங்களைத் தயாரித்து பயன்படுத்துகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தலில் பயன்படுத்துவதை சில நாடுகள் தடை செய்துள்ள நிலையில், இந்தியா தவிர பெல்ஜியம், ஐக்கிய அரபு நாடுகள், பிரேசில், கனடா, வெனிசுலா, லிதுவேனியா உள்ளிட்ட 17 நாடுகள் பயன்படுத்துகின்றன. இவற்றில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் முழுமையாகப் பயன்படுத்துகின்றன. மின்னணு இயந்திரங்கள் பயன்பாட்டால் தேர்தல் காலத்தில் சுமார் 10 ஆயிரம் டன் காகிதம் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகவும் வசதி ஏற்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.

அவர் மேலும் கூறுகையில், ‘‘நான் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது, 1999-ல் 3 மக்களவை தொகுதிகளில் மின்னணு இயந்திரம் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தல்களில் முழுமையாக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்குச்சீட்டு முறையைவிட மின்னணு இயந்திரங்கள் பயன்பாடு எளிமையானது. வாக்குச்சீட்டு முறையில் காகிதம் அதிகளவில் வீணாகும். வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. செல்லாத ஓட்டுக்களும் அதிக அளவில் பதிவாகும். வாக்கு எண்ணிக்கைக்கும் அதிக காலம் எடுக்கும். லட்சக்கணக்கில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் போது, பழுது என்பது ஒரு சதவீதத்துக்கும் கீழ்தான் ஏற்படும். பெரும்பாலும் அவை மாதிரி வாக்குப்பதிவின்போதே மாற்றப்பட்டுவிடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x