Published : 20 May 2019 09:51 PM
Last Updated : 20 May 2019 09:51 PM

சென்னையில் சிக்கிய வினோத மோட்டார் பைக் திருடன்: ஒரு ஸ்பேர் பார்ட்டுக்காக திருடியது வினையானது

சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் ஒன்று சிக்கியது. போலீஸார் விசாரணையில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியானது. மோட்டார் சைக்கிளை ரிப்பேர் செய்ய ஸ்பேர்பார்ட்ஸுக்காக திருடியது அம்பலமானது.

சென்னை வேப்பேரி, பெருமாள் பேட், முத்து கிராமணி தெருவைச்சேர்ந்தவர் நிர்மல்குமார் (19). இவர் வீட்டும்முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து வேப்பேரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.

புகாரைப்பெற்ற போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் கொடுங்கையூரில் வாகனச்சோதனையில் சந்தோஷ்குமார் (20) என்பவர் சிக்கினார். அவரது புகைப்படம், வாகனத்தின் புகைப்படத்தை கொடுங்கையூர் போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் அளித்து விபரம் கேட்க வாகனச்சோதனையில் சிக்கிய இளைஞர்தான் வேப்பேரியில் பைக் திருடிய இளைஞர் என தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல சுவாரஸ்யமான, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எம்.கே.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு வேலை எதுவும் இல்லை. சொந்தமாக கேடிபி பைக் உள்ளது.( 200 சிசி திறன், ரூ.2 லட்சம் மதிப்புள்ளது) அதை வைத்துக்கொண்டு ரேஸ் ஓட்டுவதுதான் இவரது வாடிக்கை.

கொடுங்கையூரிலிருந்து கடற்கரை காமராஜர் சாலை வரை நடக்கும் பைக் ரேஸில் கிடைக்கும் பணத்தை வைத்து செலவழிப்பது வாடிக்கை. கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையான சந்தோஷ்குமார் மீது ஆண்டுக்கு ஒருமுறை பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மாதாவரம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

ஒரு நாள் பைக்ரேஸ் போகும்போது அவரது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து அவர் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த பிரிதிவிராஜ் (24) என்பவர் நடத்திவரும் மெக்கானிக் ஷெட்டில் வாகனத்தை சரிப்படுத்த எடுத்துச் சென்றுள்ளார்.

பைக் காஸ்ட்லியான பைக் அதற்கு செலவு செய்ய ஆகும் தொகை குறித்து மெக்கானிக் சொன்ன தொகையைக்கேட்ட சந்தோஷ்குமார் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறியுள்ளார். அப்படியானால் ஒன்று செய் என மெக்கானிக் பிரிதிவிராஜ் யோசனை கூறியுள்ளார்.

எங்காவது கே.டி.எம் பைக் இருந்தால் திருடி எடுத்துவா, அதில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸை உன் வண்டிக்கு போட்டுவிடலாம் என்று கூறியுள்ளார். அது நல்ல யோசனையாக படவே அதன்படி தனது நண்பன் அஜீத் குமாரை(18) அழைத்துக்கொண்டு தனது வாகனத்தில் வந்து வேப்பேரியில் நிர்மல்குமாரின் பைக்கை திருடியுள்ளார்.

அந்த பைக்கை மெக்கானிக் ஷெட்டில் விட்டு அதன் ஸ்பேர் பார்ட்ஸை தனது மோட்டார் சைக்கிளுக்கு மாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் ரேஸுக்கு போக அப்போது வண்டி அடிபட்டுள்ளது. அதை சரிகட்ட மீண்டும் ஒரு கே.டி.எம் பைக்கை திருடி எடுத்துக்கொண்டு மெக்கானிக் ஷெட்டுக்கு வந்துள்ளார்.

அதைப்பார்த்த மெக்கானிக் பிரிதிவிராஜ், தப்பு பண்ணிட்டியே சந்தோஷ் உன் வண்டி 200 சிசி பைக், இது 390 சிசி பைக் (அதன் விலை 3.5 லட்சம்) இதன் ஸ்பேர் பார்ட்ஸ் அதற்கு ஒத்துவராது என்று கூறியுள்ளார். அப்படியானால் என்ன செய்வது என சந்தோஷ்குமார் கேட்க இந்த பைக்கை விற்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டுவா அதில் ரெடிபண்ணலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாலாஜி (25) என்பவர் உதவியுடன் எம்.கே.பி நகர் திருவள்ளூர் நகரைச்சேர்ந்த ஜான் சாமுவேல் (21) என்பவரிடம் 3.5 லட்ச ரூபாய் மோட்டார் சைக்கிளை வெறும் 8000 ரூபாய்க்கு விற்றுள்ளார். திருட்டு பைக் என்பதால் ஜான் சாமுவேல் குறைவான பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

8000 ரூபாயுடன் மெக்கானிக்கிடம் சென்ற சந்தோஷ்குமாரைப்பார்த்து ஏளனமாக சிரித்த மெக்கானிக் பிரிதிவிராஜன் 8000 ரூபாயில் என்னத்த வண்டியை ரெடி பண்ண முடியும் நீ இன்னொரு 200 சிசி மோட்டார் பைக்கை எடுத்துட்டு வா நான் ரெடிப்பண்ணி தருகிறேன் என்றுச் சொல்ல அதன்படி வேறு ஒரு மோட்டார் சைக்கிளைத்தேடி சந்தோஷ்குமார் அலைந்துள்ளார்.

அதற்குள் போலீஸில் சிக்கிக் கொண்டார். வேப்பேரியில் கேடிஎம் பைக் திருடும்போது அங்குள்ள சிசிடிவி காட்சியில் இவரது வாகனம் மற்றும் இவரது நண்பருடன் சிக்கிவிட்டார். அதுவே போலீஸார் துப்புத்துலக்க காரணமாக அமைந்தது. அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

சந்தோஷ்குமாரின் கேடிம் வாகனம், வேப்பேரியில் திருடப்பட்டு ஸ்பேர் பார்ட்ஸ் கழற்றப்பட்டு எலும்புக்கூடாய் நின்ற நிர்மல் குமாரின் கேடிஎம் பைக், 8000 ரூபாய்க்கு விற்ற 3.5 லட்ச ரூபாய் 390 சிசி கேடிஎம் பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா, ஸ்டாம்ப் போதை, பைக் ரேஸ் பைத்தியம் திருடவும், செல்போன் பறிக்கவும் இளைஞர்களை தூண்டுவது தற்போது வாடிக்கையாக உள்ளது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x