Published : 20 May 2019 08:19 PM
Last Updated : 20 May 2019 08:19 PM

விமானத்தில் புகை வந்ததாகக் கூறப்பட்டது தவறான எச்சரிக்கை;  அசவுகரியத்துக்கு மன்னிப்பு கோருகிறோம்: ஸ்கூட் ஏர்லைன்ஸ்

விமானத்தில் புகை வந்ததாகக் கூறப்பட்டது தவறான எச்சரிக்கை என்பது விசாரணையில் தெரியவந்தது. அசவுகரியத்துக்காக மன்னிப்பு கோருகிறோம் என்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் காரணங்களுக்காக  திடீரென சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இன்று அதிகாலை 3.40 மணியளவில் விமானத்தின் சரக்குகள் இடம்பெறும் பகுதியில் திடீரென புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த விமான பைலட் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார்.

விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி அனுமதி கேட்டிருந்தார். சென்னையில் உள்ள விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அவருக்கு உடனடியாக அனுமதி வழங்கினர். இச்சம்பவம் நடந்தபோது விமானத்தில் மொத்தம் 161 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருந்தனர். பின்னர், சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது'' என்று விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்கூட் ஏர்லைன்ஸின் ஸ்கூட் பிளைட் டிஆர்.567 விமானம் பிற்பகல் 3.30 மணியளவில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டது.

இது குறித்து  ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானமான ஸ்கூட் பிளைட் டிஆர்.567, இந்த விமானம் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானமாகும். இந்த விமானத்தில் சரக்குகள் இருக்கும் பகுதியிலிருந்து புகை வந்ததாகக் கூறப்பட்டு இன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இன்று அதிகாலை 3.41  மணியளவில் விமானம் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.  விசாரணைக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனால் முதற்கட்ட மதிப்பீடுகளின் படி அது தவறான எச்சரிக்கை என்று தெரியவந்தது.

பயணிகளை சிங்கப்பூர் அனுப்ப கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஏற்ப ஸ்கூட் மாற்று விமானத்தை சென்னைக்கு அனுப்பி இந்த விமானம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் புறப்பட்டது. சென்னையில் பயணிகளுக்கு தங்குமிட வசதி மற்றும் உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பே ஸ்கூட் நிறுவனத்தின் அதிகபட்ச அக்கறையாகும். அசவுகரியத்துக்காக நிறுவனம் மன்னிப்பு கோருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x