Published : 19 May 2019 02:05 PM
Last Updated : 19 May 2019 02:05 PM

ஹாட்லீக்ஸ் : ராவடி செய்த ராவ் போலீஸ்

கடந்த வாரம் தமிழகம் வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தனி விமானத்தில் திருச்சிக்கும் வந்தார்.

பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அவருக்கு திருச்சி போலீஸார் போதிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தனர். ஆனால், அவர் திருச்சி வருவதற்கு முன்னதாகவே தெலங்கானா போலீஸ் படை ஒன்று திருச்சிக்கு வந்தனர். ராவ் தங்குவதற்காக ஏற்பாடாகி இருந்த சங்கம் ஹோட்டலின் உள்பகுதி முழுவதையும் தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்ட அவர்கள், திருச்சி போலீஸாரை உள்ளே கூட விடவில்லை.

இதனால் அதிர்ந்துபோன தமிழக போலீஸார், “சந்திரசேகர ராவ் இன்னொரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர். அவர் இங்கு தங்கியிருக்கையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள்தான் பொறுப்பு. எனவே அவர் தங்கியுள்ள தளத்தில் ஆயுதப் போலீஸாரை பணியில் அமர்த்த ஒத்துழையுங்கள்” என்று எவ்வளவோ மன்றாடினார்.

ஆனால், தெலங்கானா போலீஸ் எதற்கும் மசியவில்லை. இதனால் வெறுத்துப்போன திருச்சி போலீஸார், “அப்படியானால் தெலங்கானா முதல்வர் தங்கியுள்ள அறை பகுதியில் தமிழ்நாடு போலீஸின் பாதுகாப்பு தேவையில்லை என்று எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டனர்.

இதன் பிறகே இறங்கிவந்த தெலங்கானா போலீஸ், ராவ் தங்கியிருந்த அறையை ஒட்டி தாங்களும் அதற்கு அடுத்தடுத்த நிலையில் திருச்சி போலீஸாரும் பணியில் இருக்க சம்மதித்தனர்.

தெலங்கானா போலீஸ் சண்டித்தனம் செய்தாலும் மறுநாள் காலையில் ராவ் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுவிட்டு விமான நிலையம் திரும்பும் வரை வழி நெடுகிலும் அவருக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி தங்களது கடமையைச் செவ்வனே செய்து முடித்தது திருச்சி போலீஸ்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x