Last Updated : 19 May, 2019 09:29 AM

 

Published : 19 May 2019 09:29 AM
Last Updated : 19 May 2019 09:29 AM

கொடுப்பதும் பெருமிதம்... பெறுவதும் பெருமிதம்... `ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ எம்.கிருஷ்ணனின் தாரக மந்திரம்!

இ ந்தி திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான, ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே திருமண  நிகழ்வு, கடந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் கவனம் ஈர்த்தது.  இதில், தமிழகம் பெருமை கொள்ளும் ஒரு தித்திப்பான தருணமும் இருந்தது. மணமக்கள் தங்களின் திருமண வரவேற்பு அழைப்பிதழுடன், இந்திய பிரபலங்களுக்குப் பரிசாக அனுப்பிய ‘கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ இனிப்புகள் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில்  அதிகம் வைரலானது. எல்லா பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்துகள் கூறியதுடன், நினைவில் தங்கும் ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா’ இனிப்பைப் பரிசாக அனுப்பியதற்கு நன்றியையும் தெரிவித்தனர். இது, அழைப்பிதழுக்கு இணையான முக்கியத்துவம் பெறுவதாக அமைந்திருந்தது.

“ரன்வீர்-தீபிகா திருமணப் பரிசாக எங்களிடம் இனிப்புகள் வாங்குகிறார்கள் என்றே எங்களுக்குத் தெரியாது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பதுபோலவே, தரத்துடனும், சுவையுடனும் அந்த திருமணத்துக்கும் தயாரித்து வழங்கினோம். மற்றவர்களுக்கு அவர்கள் பிரபலமான திரை நட்சத்திரம். எங்களைப் பொறுத்தவரையில் அந்த மணமக்கள் எங்களின் மதிப்புக்குரிய வாடிக்கையாளர்கள். அவர்கள் மூலம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’வுக்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.  மணமக்களின் விருந்தினர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுதான் எங்களுக்குப் மிகப் பெரிய விருது”  என்கிற கிருஷ்ணனின் வார்த்தைகள்  மட்டுமின்றி, எண்ணங்களும் இனிப்பாக இருக்கின்றன.

விஸ்வேஸ்வரய்யா விருது!

இந்திய அளவிலான தலைசிறந்த, தரமான தொழில் நிறுவனம் என்பதற்காக ‘விஸ்வேஸ்வரய்யா’ விருதைப் பெற்றிருக்கிற ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், சறுக்கல்களில் இருந்து மீண்டு வெற்றியடைந்த கதையை விவரிக்கிறார் கிருஷ்ணன்.

 “வாழ்வில் இலக்கே இல்லாமல் இருந்த எனக்கு, முதன்முதலாக ஒரு இலக்கு கிடைத்தது. வசதிகள், வாய்ப்புகள், பணம் எல்லாம் 25 வயது வரை என்னிடம் இருந்தன. ஆனால், இலக்குதான் இல்லை. ‘ஏமாத்தி ஒருத்தரால பிழைக்க முடியும்னா, உழைச்சி உன்னால வாழ முடியாதா?’ என்ற கேள்விதான் என்னை சரிவிலிருந்து மீட்டது. ‘ஐயோ, எனக்கு இப்படி நடந்துவிட்டதே’ என்று புலம்பிக்  கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இனிமேல் ஏமாறாமல், எப்படி தொழில் செய்வது என்பதில் கவனம் செலுத்தினேன். ‘சரிவிலிருந்து மீண்டால்தான் நிம்மதியாக வாழமுடியும்’ என்ற நிலை வந்த பிறகு, எனக்குள் தேவையான மாற்றங்கள் தானாக நிகழ்ந்தன.

பிரச்சினைகளும்... தீர்வும்...

ஓடி ஒளியாமல், எந்தப் பிரச்சினையையும் இருந்து முடித்துவிட்டு தூங்கப் போவது, சிறந்த வழியாகத்  தெரிந்தது. ஒளிவதால் பிரச்சினை தீராது. தேவையான வைத்தியம் பார்க்காமல்  மூடிவைத்தப் புண், ஆறிவிடப்போவதில்லை. மேலும் மோசமான சூழ்நிலையையே அது உருவாக்கும். நல்ல நிலைக்கு வளர்ந்த பிறகும், ‘சார், இந்தப் பிரச்சினையை நாங்கள்  பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஊழியர்கள் சொன்னால் நான் கேட்கமாட்டேன்.

`சின்னதோ, பெரியதோ, பிரச்சினையை நானே நேரில் சந்திக்கிறேன்’ என்று சொல்லிவிடுவேன். ஒரு கட்டத்தில், பிரச்சினையை கண்ணுக்கு கண் பார்த்து, அதை தோற்கடிப்பது என் பிரியத்துக்குரிய  விளையாட்டாக மாறிவிட்டது.

பலத்தைப் பெருக்கினால் வெற்றி!

அதேபோல, தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று தெரிந்தால், அது எவ்வளவு நஷ்டமாக இருந்தாலும், அதை ஈடு செய்துவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன். தவறு என்று தெரியும்வரை, முன்னோக்கிப்போக உரிமை உண்டு. எப்போது, தவறான பாதை என்று உணர்கிறோமோ, உடனே தயங்காமல் பின்வாங்குவதே புத்திசாலித்தனம். என்னை பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றியது இந்த சுயவிமர்சனம்தான். ‘மன்னிச்சுடுங்க, தப்பு நடந்துடுச்சு, சரி பண்ணிடலாம்’ என்று முன்வந்து பேசுவேன். வளர வளர, நம்மைச் சுற்றி ஒரு பிம்பம் வளர்ந்துகொண்டே இருக்கும். மற்றவர்கள் ‘இது உங்களுக்கு சர்வ சாதாரணம் சார்’ என்று அடித்து  சொல்லுவார்கள். உண்மையிலே, நம்முடைய பலம் என்னவென்று நமக்குத் தெரிந்திருப்பது அவசியம். பலவீனத்தைக் குறைத்து, பலத்தைப் பெருக்கிக் கொள்வதே வெற்றியை எளிதாக அடையும் வழி.  

எந்தச் சூழ்நிலையிலும், வாடிக்கையாளர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருக்கிறேன். வேறு கிளைகள் திறந்தால், தரமும் சுவையும் குறைந்து, பெயர்  கெட்டுப்போகும் என்ற பயம், புதிய கடைகளைத் திறக்கும் எண்ணத்தை தடுத்தது. ‘அது வளர்ச்சியைத் தடுக்கிற பயம்’ என்பதை ஒரு நிகழ்வு எனக்கு உணர்த்தியது.

புதிய திருப்பமும்... விரிந்த சிறகுகளும்...

கோவையில் புதிதாகத் திறந்த ஓர் ஐஸ்கிரீம் கடைக்கு, குடும்பத்துடன் சென்றேன். நார்வே தேசத்தில் தயாரிக்கப்பட்ட அதே ஐஸ்கிரீம், அதே சுவையில், மைனஸ் 20 டிகிரியில் வைத்து கோவையில்  எங்களுக்கு விற்பனை செய்தார்கள். ‘நிமிடத்தில் உருகிவிடும் ஐஸ்கிரீமை, தரமும், சுவையும் மாறாமல் கண்டம்விட்டு கண்டம் கப்பலில் கொண்டுவந்து விற்பனை செய்யும்போது,  இங்கிருக்கும் திருப்பூரிலும், ஈரோட்டிலும் நம்மால் இனிப்பு பலகாரத்தை தரமும், சுவையும் கெடாமல் தரமுடியாதா?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது. இது என்னுடைய அடுத்த இலக்காக மாறியது. தொழில் வளர்ச்சியில் புதிய திருப்புமுனையைக் கொண்டுவந்த தருணம் அதுதான். வளர்ச்சியடைய வேண்டும், அதே நேரம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடக்கூடாது. இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிறகு, என்னுடைய சிறகுகள் விரியத் தொடங்கின.

இந்த முறை சிந்தனையிலும், செயலிலும் தெளிவும், தீர்க்கமும் என்னிடம் இருந்தன. தரத்தையும், சுவையையும் எல்லா இடத்திலும் ஒரேமாதிரி கிடைக்கும்படி செய்ய, என்னென்ன தொழில்நுட்பம் வேண்டும் என்பதைக்  கண்டறியும் முயற்சியில் இறங்கினேன். வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தி, கோவையில் மட்டுமே கிடைத்த   கிருஷ்ணா ஸ்வீட்ஸை மற்ற ஊர்களிலும் கிடைக்க வழிவகை செய்ய முடிந்தது.

புதிய யுக்திக்கு அமோக ஆதரவு!

புதிய கிளைகளைத் திறக்கும்போது,  விளம்பரம் செய்வது தவிர்க்க முடியாது. பெரிய பிராண்ட் நிறுவனங்கள்கூட, திரை நட்சத்திரங்களுக்கு பெரிய தொகை கொடுத்து, அதை விளம்பரம் செய்து, புதிய கிளையைத் திறப்பதுதான் இப்போதும் நடைமுறை. ஆரம்பத்தில் நானும் அதையே கடைபிடித்தேன். ஒன்றிரண்டு முயற்சிகளில் கசப்பான அனுபவமே மிஞ்சியது. நடிகர், நடிகைகளை வேடிக்கை பார்க்க வேண்டுமானால் கூட்டம் சேரலாம். அது விற்பனைக்கு உதவாது என்று தோன்றியது.

திரை நட்சத்திரங்களை அழைத்துவர  செலவழிக்கிற பணத்தை, வாடிக்கையாளர்களுக்குச் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தேன்.  ‘ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கினால், அரை கிலோ காரம் இலவசம்’ என்ற விளம்பர உத்தியை, புதிய கிளை திறப்பு விழாவில் அறிமுகப்படுத்தினோம். ‘உனக்கும் நன்மை, எனக்கும் நன்மை’ என்கிற புதிய முயற்சிக்கு மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. ஒரு ஸ்டார் தொடங்கிவைத்தால் வரும் கூட்டத்தைவிட, எங்களது புதிய யுக்திக்கு அதிக கூட்டம் வந்தது.

பெங்களூருவில் மல்லேஸ்வரம் என்ற இடத்தில் நாங்கள் கடை திறந்த  நாளில், அந்த ஊரில் பெரிய கலவரம் நடந்தது. அந்தக் கலவரச்  சூழலிலும்,  நீண்ட வரிசையில் நின்று மக்கள் இனிப்புகளை வாங்கிச் சென்றனர். சுவையும்,  தரமும் குறையாமல் தொழில் செய்யும்வரை, வாடிக்கையாளரே எங்களுடைய ஆதார சக்தி என்பது நன்றாக விளங்கியது.

ஆன்மிகமும்... இலக்கியமும்....

விளம்பரப்படுத்தும் முயற்சிகளை புதுமையாக யோசித்து செயல்படுத்தினேன். சமூகம் நன்றாக இருந்தால், நம் தொழிலும் நன்றாக நடக்கும். எனவே, மக்களிடம் நல்லெண்ணங்கள் பரவும் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று முடிவு செய்தேன். சிறந்த சிந்தனையாளர்கள், திறமை மிகுந்த கலைஞர்கள், இலக்கிய ஆளுமைகளை  வைத்து மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தினேன்.

‘கிருஷ்ணா ஸ்வீட்ஸோட பகவத் கீதை சொற்பொழிவு, கிருஷ்ணா ஸ்வீட்ஸோட கச்சேரி, கிருஷ்ணா ஸ்வீட்ஸோட இலக்கிய கூட்டம்’  என்று நல்ல நிகழ்வுகளுடன், மக்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள்.

வழிகாட்டியான அப்துல்கலாம்...

கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால், கடவுள் நமக்கு புதிய ஆசிரியர்களை அடையாளம் காட்டிக்கொண்டே இருப்பார். அப்துல் கலாம் எனது வழிகாட்டிகளுள் ஒருவர். “இந்தியா முழுக்க உங்களுக்கு வாடிக்கையாளர்கள் உண்டு. இனிப்புப் பலகாரங்களின்  ‘செல்ஃப் லைஃப்’ உங்களால் உறுதி செய்ய முடியுமா?” என்று கலாம்  கேட்டார். அந்தக் கேள்வி என் சிந்தனையைத் தூண்டியது. எந்த இடத்தில் பிசகினாலும், நாள்பட்ட உணவுப் பொருளை உட்கொண்டால், வாடிக்கையாளரின் உடல்நலம் பாதிப்படையும். அப்படி நிகழாமல் தடுப்பதை லட்சியமாக ஏற்றுக்கொண்டேன். அதுவே தொழில் தர்மம் என்று தோன்றியது.

இன்னின்ன பலகாரங்கள், இத்தனை நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேரவேண்டியதற்குத் தேவையான பல்வேறு ஒழுங்குகளை உருவாக்கினேன். ஒழுங்குதான் உற்பத்தியில், சப்ளை செயின் மேனேஜ்மென்டில்,  செயல்திட்டத்தில், தொழில்நுட்பத்தில்  கட்டுப்பாடுகளை உருவாக்கி, முழுமையான தரக்கட்டுப்பாட்டு கொள்கைகளை உருவாக்குகிறது. இன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அடைந்திருக்கிற உயரங்களுக்கும், வெற்றிகளுக்கும் இதுபோன்ற தெய்வ மனிதர்களின் அக்கறையான கேள்விகள் வழிகாட்டி இருக்கின்றன.

சுத்தமான நெய்யால் தயாரிக்கப்பட்டவை!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, ‘எங்கள் கடையில் பலகாரங்கள் சுத்தமான நெய்யால் செய்யப்பட்டவை அல்ல’ என்றுதான் பலகாரக் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள். ‘எங்கள் தயாரிப்புகள் சுத்தமான நெய்யால் செய்யப்பட்டவை’ என எழுதி வைத்து,  முதன்முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்தது எங்கள் நிறுவனம்தான். இன்று இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் இதைப் பின்பற்றுகின்றன. பேக்கிங் முறையிலும் வசீகரமான, பயனுள்ள பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தினோம்.  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இனிப்புப் பலகாரப் பெட்டியை வெளியே வீசி எறியாமல், தானியங்களைப் பாதுகாக்கும் அஞ்சறைப் பெட்டியாக பயன்படுத்துவதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறும்போது, இன்னும் என்ன புதுமைகளை செய்யமுடியும் என்கிற உத்வேகம் பிறக்கும்.

மகிழ்ச்சியான தருணங்களில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்!

பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள், கலாச்சார நிகழ்வுகள் என மக்களின் மகிழ்ச்சியான தருணங்களில் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உடன் இருக்கிறது. ‘கொடுப்பதும் பெருமிதம்... பெறுவதும் பெருமிதம்...’ என்பதே எங்களின் கொள்கை வாசகம். கடல் கடந்த தேசங்களிலும் பலத்த வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் அபுதாபியில் கடை திறந்தபோது கூடிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனோம். உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள், தங்கள் வீட்டு குளிர்சாதனப்  பெட்டியில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸுக்கு ஒரு இடத்தை நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள்.

லிம்கா சாதனைப் புத்தகத்தில்...

இந்த அன்பை தக்கவைத்துக்கொள்வதே எங்களின் நிரந்தர லட்சியம். ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளில், ஒரே தரத்தில், ஒரே சுவையில் இனிப்புகளையும், காரத்தையும் விற்பனை செய்கிறோம். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நிறுவனத்தில் நேரடியாகப்  பணிபுரிகிறார்கள். இன்றும் எங்கள் சமையல் கூடத்தில் கருவிகளைவிட கரங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இத்தனை கரங்கள் 72 மணி நேரத்தில் 17,500 கிலோ ‘மைசூர்பா’வை தயாரித்த சாதனையை லிம்கா சாதனைப் புத்தகம் பதிவு செய்தது மற்றொரு பெருமைக்குரிய தருணம்.

‘உன்னுடைய பொருள் தரமானது, சுவையானது. அதை ருசிக்க வேண்டும் என்று ஆவல்கொண்ட வசதியற்றவர்கள், விலை அதிகம் என்று ஏங்கிப்போய்விடக்கூடாது’ என்று அப்பா சொல்லுவார். அப்பாமீது நான் கொண்டிருக்கும் பக்தி, மரியாதை மற்றும் பாசத்தால், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 20-ம் தேதியை நிறுவனர் நாளாக அறிவித்தேன். அன்று மட்டும் ஒரு கிலோ மைசூர்பா ரூ.99-க்கு

கிடைக்கும்.  ஒவ்வொரு வருடமும் எங்கள் கடைகளில் நீண்டவரிசையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் காத்திருந்து மைசூர்பா வாங்குவார்கள். ஓர் இனிப்புப் பலகாரத்தை வாங்க, ஒரே நேரத்தில் 26,720 பேர் வரிசையில் காத்திருந்த வரலாற்றை 5  வெவ்வேறு நிறுவனங்கள் பாராட்டி சான்றிதழ்கள் அளித்தன.  நிறுவனர் நாளில் மட்டும் 14 டன் மைசூர்பா விற்பனை ஆகிறது. தர்மத்துக்கும், தரத்துக்கும் கிடைத்திருக்கிற வெற்றி அது.

இப்போது என்னுடை மகள்கள் வைஷ்ணவி, ஹரிதா இருவரும் நிறைய புதுமை சிந்தனைகளுடன் தொழிலில் பங்கெடுக்கத் தொடங்கிவிட்டனர். இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குகிற இந்த காலமாற்றத்திலும்,  ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் தனித்துவம் குறையாமல் இனிப்புப்  பலகாரங்களைத் தயாரிக்கிறோம்.  பாரம்பரியம் மிக்க இனிப்புகள் மட்டுமல்லாது, விதம்விதமான இனிப்புகளை புதுப்புது சுவைகளில் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.

இருபத்தி ஐந்து  வயது வரை சுதாரிக்காமல், வாழ்வில் தெளிவில்லமால், உலகம் அறியாமல் இருந்த நானே, பாரம்பரியம் மிக்க வணிக குடும்பத்தில் இருந்து வந்த பெரியவர்கள் அலங்கரித்த, இந்திய தொழில் வர்த்தக சபை என்ற புகழ்பெற்ற அமைப்பின் தலைவராகப் பதவி வகிக்க முடிந்திருக்கிறது. இலக்கு நோக்கி தீவிரமாகப் பயணிக்கத் தயாராக இருக்கிற யாரும் வெற்றி பெற முடியும் என்பதற்கு  என் வாழ்வும் சிறிய உதாரணம்” என்று புன்னகை செய்கிறார் கிருஷ்ணன்.  ‘அன்பைச் சொல்ல அழகான வழி’ என்பது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் முகப்பு வாசகம். இனிப்பு என்பது நம்முடைய வீடுகளில்  மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். ‘இனிப்பு என்பது நல்லெண்ணங்களின் வெளிப்பாடு’ என்று மாற்றி அமைத்ததுதான் கிருஷ்ணன் அவர்களின் சாதனை. எளிய மனிதர்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கை தருகிற இவரின் வெற்றிக்கு என்றுமே மதிப்பு அதிகம்! 

அடுத்த சாம்ராஜ்யம்... அடுத்த வாரம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x