Published : 15 May 2019 03:15 PM
Last Updated : 15 May 2019 03:15 PM

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டை புறக்கணிக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வில் அனுப்பப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அனிருத் போஸ், கவுஹாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களின் திறமை குறித்தோ, அனுபவம் மற்றும் அப்பழுக்கற்ற தன்மை குறித்தோ யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.

மாறாக, இவர்களின் சொந்த உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாய்ப்பு வழங்கப்படுவதைப் பார்க்கும் போது, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இந்தியாவின் பெரிய உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகளில் ஒருவர் கூட உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி பானுமதி கடந்த 13.08.2014 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் ஓய்வு பெற்று விட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட 26 நீதிபதிகளில் ஒருவர் கூட சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த அனுபவமும், திறமையும் உள்ள நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

ஒரு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சதாசிவம், இப்ராஹிம் கலிபுல்லா, நாகப்பன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர்.

பின்னர்  2014-2016 காலத்தில் கலிபுல்லா, நாகப்பன், பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக பானுமதி மட்டுமே தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். 

இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய உயர் நீதிமன்றங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றங்களாக உருவாக்கப்பட்டு, விடுதலைக்குப் பிறகு உயர் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டவை. இந்தியாவின் மிக மூத்த நீதிமன்றங்களான அவை தனிச்சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் பாதியளவினர் இந்த 3 உயர் நீதிமன்றங்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து 5 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து ஒருவர் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் இருப்பது நீதியல்ல.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 4 பேர் மும்பை உயர் நீதிமன்றத்தையும், மூவர் கர்நாடகத்தையும் சேர்ந்தவர்கள். ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கொல்கத்தா, டெல்லி, அலஹாபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து தலா இருவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த இரு நீதிபதிகள் ஒரே நாளில் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வில் அனுப்பப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பால்வசந்தகுமாருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அவருக்குப் பின் இப்போதுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதாகர், ராமசுப்பிரமணியன், மணிக்குமார், சுப்பையா, சத்யநாராயணா உள்ளிட்ட நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியானவர்கள்.

இந்தியாவின் மூத்த உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் புறக்கணிக்கப்படும் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும். வரும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், அவற்றில் தகுதியான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும்" என, ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x