Last Updated : 02 May, 2019 09:31 AM

 

Published : 02 May 2019 09:31 AM
Last Updated : 02 May 2019 09:31 AM

நலிந்து வரும் லாடம் கட்டும் தொழில்

நவீன கால வளர்ச்சியால், தமிழகத்தில் பாரம்பரியமான  பல தொழில்கள் மெல்ல மெல்ல நலிந்து, பிறகு காணாமலேயே போய்விட்டன. அவற்றில்  ஒன்று எருதுகளுக்கு லாடம் கட்டும் தொழில்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் உள்ள கொல்லர்கள், தங்களுடைய பட்டறையிலேயே லாடம் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக, எருதுகளின் கால் அளவுகளுக்கு ஏற்ப, கனமான இரும்புத் தகடுகளில் தயாரிக்கப்பட்ட லாடமும், அவற்றுக்குப் பொருந்தக்கூடிய ஆணிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர்.

லாடம் அடித்தல்!

இதுதவிர, பொது இடங்களிலும் லாடம் அடிக்கப்படும். கிராமத்தில் உள்ள மைதானம், அரசமரத்தடி, குளங்கரைகள்தான் பெரும்பாலும் லாடம் அடிக்கும் இடமாக இருக்கும். லாடம் அடிக்க வேண்டிய எருதுகளை கீழே படுக்க வைத்து, அதன் நான்கு கால்களையும் கயிற்றால் கட்டிவிடுவர். பின்னர், எருதுகளின் கண்களை துணியால் மூடியவுடன், எருது உரிமையாளர் அதன் மூக்கணாங்கயிற்றை வலுவாகப் பிடித்துக் கொள்வார். லாடம் கட்டுபவர் எருதுகளின் குளம்பில் ஏற்கெனவே அடிக்கப்பட்டுள்ள, தேய்ந்துபோன பழைய லாடத்தை நீக்கிய பின்னர்,  தன்னிடம் உள்ள சிறு கத்தியால் குளம்பை சீவி சீராக்குவார்.

தொடர்ந்து, எருதுகளின் காலுக்குப் பொருத்தமான லாடத்தை தேர்வு செய்து, அதை எருதுகளின் கால் குளம்பில் வைத்து, ஆணி அடித்துப் பொருத்துவார். லாடம் அடிப்பதை பார்க்கும்போது, லாடம் கட்டுபவர் எருதுகளை சித்ரவதை செய்வதுபோலத் தோன்றும், ஆனால், உண்மையில் லாடம் அடிப்பது, ஒரு ஜீவகாருண்ய செயலாகும்.

ஏனெனில், லாடம் பொருத்தப்படாத எருதுகள் கரடுமுரடான பாதைகளில் நடக்கும்போது,  அவற்றின் கால் குளம்புகளில் முட்கள், கூர்மையான கற்கள் குத்தும். தார்ச் சாலைகளில் தொடர்ந்து நடக்கும் எருதுகளின் கால் குளம்பு தேய்ந்து,  காயம் ஏற்படும். காயத்தால் எருதுகள் நடக்க முடியாமல் அவதிப்படும் என்பதால்,  அவற்றின் கால் குளம்புகளைப் பாதுகாக்கவே லாடம் அடிக்கப்படுகிறது. மனிதர்கள் தங்களது பாதங்களுக்கு காலணி அணிந்து கொள்வது போன்றுதான், எருதுகளுக்கு லாடம் பொருத்துவதும் என்கின்றனர் லாடம் கட்டுபவர்கள்.

பாரசீகர்களின் அறிமுகம்!

இந்தியாவில் எருதுகள், குதிரைகளுக்கு மட்டுமே லாடம் அடிக்கப்படுகிறது. லாடம் அடிக்கும் முறையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீகர்கள். பண்டைய காலத்தில் இந்திய அரசர்கள்,  தங்களுடைய  சொந்த உபயோகத்துக்கும், குதிரைப் படைக்கும் பாரசீக நாட்டிலிருந்து உயர் ரக குதிரைகளை இறக்குமதி செய்தனர். பாரசீக நாட்டில் குதிரைகளின் கால் குளம்புகள் தேய்ந்து விடுவதைத் தவிர்க்க, அவற்றின் கால்களில் லாடம் பொருத்தும்முறை வழக்கத்தில் இருந்தது.

பாரசீகத்தில் இருந்து குதிரைகளுடன், அவற்றின் கால் குளம்புகளுக்கு லாடம் பொருத்தும் பழக்கமும் இந்தியாவுக்கு வந்துள்ளது.  பின்னர்,  குதிரையுடன் சேர்ந்து, எருதுகளுக்கும் லாடம் அடிக்கத் தொடங்கினர்.

லாடம் இல்லாத எருதுகளுக்கு அபராதம்!

தற்போது  ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு போலீஸார் அபராதம் விதிப்பதுபோல, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு ரோந்து செல்லும் போலீஸார்,  சாலைகளில் செல்லும் பொதி சுமக்கும் மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிடுவர். வண்டியில் பூட்டப்பட்டு இருக்கும் எருதுகளின் கால்களில் லாடம் அடிக்காமல் இருந்தால், வண்டி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இதனால் கடந்த60 ஆண்டுகளுக்கு முன்பு லாடம் அடிப்பவர்களுக்கு கடும் கிராக்கி இருந்தது.

இதுகுறித்து லாடம் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறும்போது, “மாட்டு வண்டிக்குப் பதிலாக சரக்கு ஆட்டோ, உழவு மாடுகளுக்குப் பதிலாக டிராக்டர் என பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், லாடம் அடிக்கும் முறையில் பல நூறு ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. லாடம் அடிக்க நவீனக் கருவிகள் ஏதும் இல்லாமல், பழைய முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. எருதுகளுக்கு லாடம் கட்டுவது என்பது  எளிதான செயல் கிடையாது. மிக நுட்பமாக செய்ய வேண்டிய பணி. சிறிது பிசகினாலும் எருதுகளின் கால்களை ஆணிகள் பதம் பார்த்துவிடும்.

முதலில் மாடு கட்டும் பிடிகயிற்றைவிட சற்றுப்  பெரிய கயிறை, எருதுகளின் தாடைக்கு கீழ் கொடுத்து, கயிற்றின் அடுத்த நுனியை மாட்டின் வலப் பக்கமாகக் கொண்டு வந்து, இரு நுனியையும் ஒரு இழுஇழுத்தால் எருது பக்கவாட்டில் சரிந்து படுத்துவிடும். எருதின் உரிமையாளர் அதன் கொம்பை பிடித்துக் கொள்வார். சிறு கயிறு கொண்டு முன்னங்கால்களை முதலிலும், அடுத்து பின்னங்கால்களையும் கட்டிய பின்னர், நான்கு கால்களையும் மொத்தமாக வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.

எருதின் நான்கு கால்களின் குளம்புகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது, அதன் குளம்புகளில் உள்ள மண்,அழுக்கு ஆகியவற்றை நீக்கி, பின்னர் கத்தியால் குளம்புகள் செதுக்கப்பட்டு,  சமமாக்கப்படும். குளம்பின் சதைப்பகுதியில் ஆணி இறங்காமல் லாவகமாக அடிக்க வேண்டும்.

நாட்டு எருதுகளுக்கு ஒருவகை லாடமும், மற்ற இன மாடுகளுக்கு வேறொரு வகை லாடமும் பயன்படுத்துவோம். வெட்டினால் வளரும் திறன்மிக்க கால்குளம்பின் மீது கனமான இரும்புத் தகடுகளை, மாட்டின் கால்களின் அகல, நீளத்துக்கு ஏற்ப வெட்டி, அதில் ஆணி அடிக்க வசதியாக  சிறு துளைகள் இடப்படும். அதை மாட்டின் கால்களோடு சேர்த்து அடிக்கவேண்டும். இரண்டு அங்குல  ஆணி கொண்டு லாடம் அடிக்கப்பட்டதால்,  எருதுகள் வலியின் காரணமாக இரண்டு நாட்களுக்கு மிக மெதுவாகத்தான் நடக்கும். லாடம் அடிக்கப்பட்ட எருதுகளை இரு நாட்களுக்கு பணிகளுக்கு பயன்படுத்த முடியாது.

தார்ச் சாலையில் செல்லும் எருதுகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை லாடம் அடிக்க வேண்டும். லாடம் இல்லாத மாட்டின் கால்கள்,  காயம் ஏற்பட்டு வீணாகிவிடும்.

எங்களது தாத்தா, அப்பா காலத்தில்,  இரவு முழுக்க லாடம் தயாரித்துவிட்டு, மறுநாள் கிராமங்களுக்குச் சென்று லாடம் கட்டுவோம் அன்று ஊரே திருவிழாக் கூட்டமாக இருக்கும். அன்றைய காலத்தில் லாடம் கட்டுபவர்கள் கிராமத்துக்கு ஒருவர் இருப்பார். ஆனால், தற்போது லாடம் கட்டுபவர்களைத் தேடிக்  கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. கடும் பாரம் சுமந்து உழைக்கும் ஒவ்வொரு எருதின் கால்குளம்பும் தேயாமல் இருக்க, மூன்று  மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் லாடம் அடிக்க வேண்டும். 

எருதுகளின் 4 கால்களிலும் 8 லாடங்கள் அடிக்கப்படுகின்றன. லாடம் அடிப்பதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி, லாடத்தகடு, ஆணிகளுக்குச் சென்று விடுகிறது. முன்பெல்லாம் மாதத்தில் அனைத்து நாட்களிலும் வேலை இருக்கும். தற்போது 10 நாட்களுக்கு வேலை கிடைப்பதே சிரமமாக உள்ளது. ஊர் ஊராகச் சுற்றி மாடுகள் வைத்திருப்போரை தேடிப்போய், லாடம் அடித்து தருகிறோம். லாடம் அடிக்கும் தொழில் தெரிந்தவர்கள் இப்போது குறைந்து விட்டனர். இந்த தொழில் செய்யும் கடைசி தலைமுறை நாங்களாகத்தான் இருப்போம். அடுத்த தலைமுறைக்கு இந்த தொழில் இருக்குமா என்றே தெரியவில்லை” என்கின்றனர் கவலையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x