Last Updated : 02 May, 2019 09:28 AM

 

Published : 02 May 2019 09:28 AM
Last Updated : 02 May 2019 09:28 AM

அச்சுறுத்தும் பாறைக் குழிகள்!- அஜாக்கிரதையால் உயிரிழக்கும் மாணவர்கள்

அண்மையில் திருப்பூர் அம்மாபாளையம் அருகே, தனியாருக்கு சொந்தமான பாறைக் குழியில்  குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவருமே,அவர்களது பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பதுதான் மிகப் பெரிய சோகம்.  தங்களதுவாழ்க்கைக்கு அர்த்தமாக இருந்த பிள்ளைகள் உயிரிழந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாத பெற்றோர் கதறியழுதது காண்போரைக்  கண்கலங்கச் செய்தது.

தொழில் நகரமான திருப்பூர், சென்னைக்குஅடுத்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் குடியேறும் மாவட்டமாகும். இங்கு,  பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால்,  குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை பெற்றோர் தவற விடும் சூழலே நிலவுகிறது.மாவட்டத்தின் பல்வேறு

பகுதிகளிலும்  கல் குவாரிகளாக செயல்பட்டு, பிறகு கைவிடப்பட்ட பாறைக் குழிகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, திருப்பூர், மங்கலம், பல்லடம், தாராபுரம், அவிநாசி, திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் அதிகமான,  200 அடி ஆழ பாறைக் குழிகள் உள்ளன. இவையனைத்தும் ஒருகட்டத்தில் கல் குவாரிகளாக செயல்பட்டு, அரசிடம் பெற்ற அனுமதி காலாவதியானவுடன்,  கைவிடப்பட்டவையாகும்.இவ்வாறு செயல்பாட்டில் இல்லாமல்போன பாறைக் குழிகள் மற்றும் கைவிடப்பட்ட கிணறுகள்தான், தற்போது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே மாறியுள்ளன.

தொடரும் உயிரிழப்புகள்!

ஆண்டுதோறும் கோடை விடுமுறைகளில், எளிதில் அணுகும் வகையில் உள்ள பாறைக் குழிகளுக்கு மாணவர்கள் குளிக்க செல்வதும், நீரில் மூழ்கி உயிரிழப்பதும் திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கதையாகவே உள்ளது.  உயிரிழப்புகளைத் தடுக்க அரசு சார்பில் உரிய வரைமுறைகள் விதிக்கப்பட்டிருந்தும், பலன் இல்லை. செயல்பாட்டில் இல்லாத

பாறைக் குழிகளுக்கு  பல சுற்று வேலி உள்ளிட்டபாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும், எளிதில்அணுகும் வகையில் இருப்பதுமே விபத்துகளுக்கு முக்கியக்காரணம்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி-பெருமாநல்லூர்ச் சுற்று சாலையோரம் பெரிய  பாறைக்குழி, கழிவுநீர் நிரம்பியும், திறந்த வெளியிலும் ஆபத்தான நிலையில் உள்ளது. பல இடங்களிலும் இதே நிலைதான். அம்மாபாளையம் பகுதியில் 2 மாணவர்கள் உயிரிழந்த இடத்தில் 5 பாறைக் குழிகள் உள்ளன. இவை அனைத்தும் பெரிய பரப்பையும், 200 அடிக்கும் மேல் ஆழம் கொண்டவையாகவும் உள்ளன. பாறைக் குழிகளுக்கு சரிவர சுற்றுவேலி அமைக்கப்பட வில்லை.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதும், எளிதில் வந்து செல்லலாம், கண்காணிக்கவும் ஆட்கள் இல்லை என்பதுமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் தன்னார்வலர்கள்.

இதுகுறித்து  மாவட்ட சுரங்கம் மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒவ்வொரு கல் குவாரிகளுக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுமதி வழங்கப்படுகிறது.

அதற்குப் பிறகு செயல்பாட்டில் இல்லாமல்போகும் பாறைக் குழிகளை கண்காணிக்கும் பொறுப்பு, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் என அனைவருக்கும் உள்ளது.

அதிகாரிகள் குறிப்பிட்ட காலஇடைவெளிகளில்,  சம்பந்தப்பட்ட பாறைக் குழிகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்தவகையில், உரிய  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

மேலும், “ஒவ்வொரு பாறைக்குழிக்கும் சுற்றுவேலி அமைப்பது கட்டாயம். பாதுகாப்பு விதிகளை உரிமையாளர்கள் கடைப்பிடிக்காவிட்டால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்றும்  வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் கோட்டாட்சியர் செண்பகவள்ளி கூறும்போது, “திருப்பூரில் உள்ள அனைத்து பாறைக்கு ழிகளையும் ஆய்வுசெய்து,  பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க,  வட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத இடங்களில், உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அம்மாபாளையத்தில் விபத்து நேரிட்ட பாறைக் குழியில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

பெற்றோர் கண்காணிப்பு அவசியம்!

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “அம்மாபாளையத்தில் உயிரிழந்த இரு  மாணவர்களும் நீச்சல் தெரியாத நிலையில், பாறைக் குழியில் உயிரிழந்துள்ளனர். இதேபோல, கடந்த வாரம் உடுமலையில் 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால்,  பகல் நேரங்களில் பள்ளிச் சிறுவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலைகளைத் தேடிச் செல்வது வழக்கமாக உள்ளது. பலர் நீச்சல் தெரியாமல்,  நண்பர்கள் கொடுக்கும் தைரியத்தில் தண்ணீரில் இறங்குகின்றனர்.

தெர்மாகோல், பஞ்சு போன்றவற்றை இடுப்பில் கட்டி, நீர்நிலைகளில் நீச்சல் பழகுவது தவறான விஷயம். முறைப்படி நீச்சல் கற்றுக் கொள்வதே நல்லது.  இதுபோன்ற பாறைக் குழிகள், கிணறுகளுக்குச் சென்று நீச்சல் பழகுவதும் தவறானது. நீச்சல் தெரியாமல் குளிக்கச் செல்லக்

கூடாது. எத்தனை வேலைப்பளு இருந்தாலும், தங்கள் கண்காணிப்பில் இல்லாதபோது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. மேலும், இதில் உள்ள ஆபத்து குறித்து குழந்தைகளுக்கு விளக்கிக் கூறவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x