Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM

ரூ.12 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்; சந்தேக நபர் படத்தை வெளியிட்ட போலீஸ்: தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் என அறிவிப்பு

செங்கல்பட்டு பகுதியில் போலீஸ் எனக்கூறி ரூ.12 கோடி மதிப்பு நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபரின் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. ‘இது தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையின் மேலாளர் தயாநிதி. இவர் மதுரையில் நடைபெற்ற நகை கண்காட்சியில் நகைகளைக் காட்சிக்கு வைத்துவிட்டு, நகை விற்பனை தொகை ரூ.5 லட்சம் மற்றும் ரூ.12 கோடி மதிப்புள்ள எஞ்சிய நகைகளை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் சிலருடன் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை நோக்கி காரில் வந்தார்.

இவர்களின் கார் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடி அருகே வந்தபோது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் காரை சோதனையிடுவதுபோல் நடித்துள்ளனர். பின்னர் காரில் இருக்கும் நகைகளை பார்த்து உரிய ஆவணங்கள் ஏன் இல்லை என்று கேட்டு நகைகளை பறிமுதல் செய்வதுபோல் போக்குகாட்டி, மேலாளர் தயாநிதியை மட்டும் காரில் அழைத்துக் கொண்டு நகைகளுடன் அங்கிருந்து கிளம்பினர். ஒரகடம் அருகே தயாநிதியை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து கடத்தல் கும்பல் தப்பிவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருவது தெரிந்துள்ளது. அவரது புகைப்படத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி நேற்று வெளியிட்டார். பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:அமதிஸ் பேப் நகைக் கடையின் நகைகள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் கிடைத்து உள்ளது. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும். மேலும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 044-27238070, 044-27237720, செங்கல்பட்டு உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கந்தன் - 9840980338, 7010065974, 044-27431424, செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன் - 9443349887, 9498100278, 9080117773 ஆகியோரது தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x