Published : 30 Apr 2019 07:23 PM
Last Updated : 30 Apr 2019 07:23 PM

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளி சென்னையில் யாரை சந்தித்தார் ?- என்.ஐ.ஏ விசாரணை

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் கூட்டாளி சென்னை வந்ததாகவும், சென்னையில் சிலரை சந்தித்ததாகவும் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ விசாரணையில் குதித்துள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிருத்துவ தேவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது.

குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரை பிடித்து இலங்கை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இண்டர்போல் உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் குதித்துள்ளன.

இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக இந்தியாவிலும் உளவுத்துறை, ரா, என்.ஐ.ஏ அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இலங்கைக்கு அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்டது ஜக்ரான் பின் ஹாசிம் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்தது. ஜக்ரான் பின் ஹாசிமும் இந்த தாக்குதலில் பலியானான். 

தொடர்ந்து இலங்கை புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் ஜக்ரான் பின் ஹசீமுக்கு கூட்டாளி ஒருவன் இருந்ததாகவும் அவன் பெயர் ஹசன் என்பதும் தெரியவந்துள்ளது.

 தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அடையாளம் காணப்படாமல் இருப்பவர்களில் ஒருவனாக ஹசன் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தீவிரவாதி ஹசன் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சென்னைக்கு வந்து சென்ற தகவல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஜக்ரான் ஹாசிமின் நெருங்கிய கூட்டாளி தமிழகத்திற்கு வந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது

விசாரணையில் ஹசன் என்ற தீவிரவாதி சென்னையில் ஒருவரை சந்தித்து சென்றதாக  தமிழக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹசன் தமிழகத்தில் தங்கியுள்ளபோது யார் யாரை சந்தித்தான் என்பது குறித்த தகவலை என்.ஐ.ஏவும், தமிழக உளவுத்துறையும் சேகரித்து வருகிறது.

இதற்கிடையே ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் உள்ள கேரள மாநிலம் பாலக்கோட்டைச் சேர்ந்த ரியாஸ் என்பவரையும் என்.ஐ.ஏ அமைப்பு நேற்று கைது செய்தது. ரியாஸுடன் மேலும் 3 பேரை பிடித்துள்ளது.

கைதான ரியாஸ் தொடர்ந்து ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் இலங்கை வெடிகுண்டு தாக்குதல் வழக்கின் மூளையாக செயல்பட்ட ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஹாசிம் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கேரளாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொடர்பு உறுதியாகியுள்ளது என என்.ஐ.ஏ தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம், என கூறப்படுகிறது.

''பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் என்னும் அபூபக்கர் கடந்த 2016-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த 15 பேர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் இவர் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது. இதில் 14 பேர் ஆப்கனுக்கும், ஒருவர் சிரியாவுக்கும் சென்றதாக கூறப்பட்டது. இதிலும், ஐஎஸ் இயக்கத்தின் முக்கிய நபரான சிரியாவில் உள்ள அப்துல் கையூம் என்பவருடன் ரியாஸ் தொடர்பில் உள்ளதும் அம்பலமாகியுள்ளது.

ரியாஸிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதாக சமூக வலைதளங்களில் ஆடியோவைப் பரப்பிய அப்துல் ரஷித் அப்துல்லாவுடன் ஆன்லைனில் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹாசன் கேரளாவுக்கு வந்ததும் அவருடன் ரியாஸ் பயணம் செய்ததும் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து திட்டமிடப்பட்டதாகவும் என்.,ஐ.ஏ தரப்பு தெரிவிக்கிறது. தமிழகம் வந்த ஹாசனுடன் ரியாஸும் வந்திருக்கலாம் தமிழகத்தில் யார் யாரை ரியாஸ் மற்றும் ஹாசன் சந்தித்தார்கள் என்று தற்போது ரியாஸிடம் விசாரணை நடக்கிறது.

சென்னையில் 3 மாதம் ஹாசன் தங்கியிருந்ததாகவும், அவன் சென்னையில் யார் யாரை எல்லாம் சந்தித்தான் என்று என்.ஐ.ஏ தீவிரமாக விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியாஸும் அவனுடன் சிக்கிய மேலும் மூன்று பேரிடமும் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் முடிவில் சென்னையில் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

தமிழக உளவுத்துறையும் இதில் சில தகவல்களை சேகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x