Published : 26 Apr 2019 02:53 PM
Last Updated : 26 Apr 2019 02:53 PM

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் , தமீமுன் அன்சாரி உள்ளிட்ட 4 பேரை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை: விரைவில் நோட்டீஸ்

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர், அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா அளித்த பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. இதில் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட 3 பேரும் அடக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அது 135 ஆகக் குறைந்தது. பின்னர் அந்த இடத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் எண்ணிக்கை 117 ஆகக் குறைந்தது. பின்னர் சூலூர், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவு, ஓசூர் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் காரணமாக அது 114 ஆக மேலும்  குறைந்தது.

இரட்டை இலை சின்னத்தில் வென்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு தனியாக அணியாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் கருணாஸ், தனியரசு தங்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுவதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தமீமுன் அன்சாரி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகிரங்கமாக திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்.

இதேபோன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களில் விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும் தனி அணியாக இயங்கி வந்தனர். இவர்கள் 4 பேர் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து காலையில் அமைச்சர் சி.வி.சண்முகம், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் தனபாலைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையில் 4 எம்.எல்.ஏ.க்களையும் நீக்க கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று மேற்கண்ட 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x