Last Updated : 25 Apr, 2019 03:23 PM

 

Published : 25 Apr 2019 03:23 PM
Last Updated : 25 Apr 2019 03:23 PM

ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்ட கள்ளழகர்: சித்திரை திருவிழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

வைகை ஆற்றில் இறங்க வரும் வழியில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு அழகர் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றது மதுரை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 8-ல் தொடங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் என விமரிசையாக விழா நடைபெற்று முடிந்தது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் ஏப். 19-ல் நடைபெற்றது. அன்று அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் பச்சைபட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த சித்திரை திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் வைகை ஆற்றில் இறங்க வரும் வழியில் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிட்டு அழகர் ஒதுங்கி நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆழ்வார்புரம் பகுதியில் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே பல்லக்கில்  அழகர் வலம் வருகிறார். அவருக்கு பின்னால் உயிருக்கு போராடும் நோயாளி ஒருவருடன் சைரன் ஒலித்தபடி வருகிறது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டு அழகர் பல்லக்கு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. பக்தர்களும் வழிவிட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஆம்புலன்ஸ் அந்த இடத்தை கடந்து செல்வது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் மக்களால் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. உயிருக்கு போராடும் நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ்-க்கு, கள்ளழகர் வழிவிட்ட சம்பவம் மதுரை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x